"ரூட் மாறுது.." - வெற்றிக் குறி காட்டும் ஓபிஎஸ் தரப்பு.. வழக்கின் திசை யாருக்கு சாதகம்?
சென்னை : ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு தங்களுக்கு சாதகமாகவே வந்திருப்பதாக நம்பிக்கையோடு பேசுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவரால் ஓபிஎஸ் தரப்பினர் கட்சியை விட்டே நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடத்தியதும், ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

ஓபிஎஸ் வழக்கு
ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு தடைகோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ஆம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு, ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட உரிய வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே, ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்றம்
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டங்கள் சட்ட விரோதமானவை. ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது. ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர். எனவே, அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்து தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

எடப்பாடி தரப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் முந்தைய நிலைக்கே திரும்பவும் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. ஆனால், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட முடியும் எனத் தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடுவதாக இருந்தால், ஜூலை 11-ஆம் தேதிக்கு முந்தைய நிலை தொடருமாறு உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து, 3 வாரங்களில் தீர்வு காண வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.

யாருக்கு சாதகம்?
உச்ச நீதிமன்றம், மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே இந்த வழக்கை மாற்றி விட்ட நிலையில், இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புமே கூறி வருகிறது. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக தங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளே வந்திருப்பதால், இதிலும் தங்கள் கையே ஓங்கும், ஓபிஎஸ் மனு நிராகரிக்கப்படும் என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.

குஷியில் ஓபிஎஸ் தரப்பு
அதேநேரம், முன்பு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது வாதங்களைக் கேட்டு, உயர் நீதிமன்றம் 3 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டிருப்பதே தங்களுக்கு கிடைத்த வெற்றி தான் என குஷியாகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், இனி தங்களுக்கு சாதகமான தீர்ப்பே கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.

தற்போதைய நிலை
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்ற தீர்ப்பும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமி தரப்பினரை பொறுத்தவரை தற்போதைய நிலை என்பது ஈபிஎஸ் இடைக்காலப் பொதுச் செயலாளர். ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்கள் தரப்பில் புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் டீம்
அதேசமயம், ஓபிஎஸ் தரப்பினரோ இப்போதும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓபிஎஸ் தான் இருக்கிறார் என்கிறார்கள். அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்பட புதிதாக பலரை நியமித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இரு தரப்பும் மாறுபட்ட கருத்தோடு செயல்பட்டு வருவதால் யார் உண்மையில் அதிமுகவில் அதிகாரம் மிக்கவர் என்பதில் குழப்பம் நிலவுவதால், எது தற்போதைய நிலை என்பதிலும் குழப்பங்கள் இருக்கின்றன.

வெற்றிக் குறி காட்டும் ஓபிஎஸ்
இந்நிலையில் தான், தற்போதைய நிலை என்றால், குழப்பங்களுக்கு முந்தைய நிலைதான், புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகளும், நியமனங்களும் செல்லாது. பொதுக்குழு சட்டவிரோதமாக கூட்டப்பட்டது என்பதை ஐகோர்ட்டில் நிரூபிப்போம். பொதுக்குழுவை ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் கூட்டவே முடியாது எனும்போது, அதற்குப் பிறகான அனைத்து மாற்றங்களும் செல்லாமல் போய்விடும். எனவே, நீதி எங்கள் பக்கம் தான் என வெற்றிக் குறி காட்டுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.












Click it and Unblock the Notifications