ரூபாய் நோட்டுகளில் வேறு தலைவர்களின் படங்களை அச்சிட முடியாது.. இதுக்கு காரணமும் சொன்ன ஹைகோர்ட்டு!
சென்னை: நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலேயரின் அடிமை சங்கிலியில் இருந்து விடுவித்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு பெரும் பங்கு வகித்தவர் மகாத்மா என்பது அனைவருக்கும் தெரியும்.
மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் அவரது உருவப்படம் இடம் பெற்றுள்ளது. இதேபோல் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தையும் ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மகாத்மா காந்தி உருவப்படம்
ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள மகாத்மா காந்தி உருவப் படத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி குழு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியை தவிர வேறு எந்த தலைவர்களும் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ரூபாய் நோட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படம் அச்சிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நேதாஜி படம் வேண்டும்
அந்த மனுவில், 'நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எனது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு எனது கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை
மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து, ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்தை அச்சிட உத்தரவிட வேண்டும். என்று கே.கே.ரமேஷ் மனுவில் கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
மத்திய அரசு வழக்கறிஞர் தங்களது தரப்பு விவாதத்தை முன்வைத்தார்.

வேறு படங்கள் கூடாது
''ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள மகாத்மா காந்தி உருவப் படத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி குழு 2010 அக்டோபரில் பரிசீலனை செய்தது. பின்னர் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப் படத்தைத் தவிர வேறு உருவப் படங்கள் இடம் பெறக்கூடாது எனக் குழு முடிவு செய்தது. இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது''' என்று அவர் கூறினார்

சாதிச் சாயம் பூசப்படும்
இந்த கருத்துக்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ''ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர வேறு இந்தியத் தலைவர்களின் உருவப் படங்கள் இடம் பெற்றால் அவர்கள் மீது மதம், சாதிச் சாயம் பூசப்படும். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது'' என்று அதிரடியாக தெரிவித்தனர். மேலும் கே.கே.ரமேஷ் மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications