நிறுவனராக நின்று கொண்ட ராமதாஸ்! பாமக படை தளபதியாக 25 ஆண்டுகள்! ஜி.கே.மணியை நம்ப காரணம் என்ன?
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சியின் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த ஜி.கே.மணி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்..
Recommended Video
மருத்துவராக இருந்த ராமதாஸ் 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் வன்னியர் சங்கத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே டிரிபிள் எஸ் என்று அழைக்கப்பட்ட சமூக சேவை சங்கத்தில் அவருக்கு அறிமுகம் ஆனவர்தான் ஜிகே மணி.
அப்போதே அவரது துடிப்பான செயல்பாடுகள் ராமதாஸ் அவர்களை ஏற்றுவதால் பின்னர் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போதும் ராமதாஸ் உடன் இணைந்து பணியாற்றினார். அப்போது தொடங்கிய ஜி.கே.மணியின் பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

பாமக ஜி.கே.மணி
ஜி.கே.மணி அரசியலுக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஓர் ஆசிரியர்; சமூக சேவகர். அவரது சொந்த ஊரில் சிலருடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 1980ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்ட ஜி.கே.மணி, அதன்பின் முழுநேரமாக சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டார். அதன்பின் வன்னியர் சங்கப் பணிகளுக்காக முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஜி.கே.மணி, ராமதாஸின் வழிகாட்டுதலில் சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்னியர் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்து, கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியும் தீவிரமாக களப்பணியாற்றினார்.

வன்னியர் சங்க மாநாடு
வன்னியர் சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில், 1984ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ஜி.கே. மணிக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை ராமதாஸ் வழங்கினர். . இந்த நிகழ்வில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரும் பங்கேற்று மணியை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மக்கள் பிரதிநிதி
பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாகவே பாமகவுக்கு கிடைத்த முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மணிக்கு உண்டு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு 1986-ஆம் ஆண்டில் தான் நேரடித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு வன்னியர் சங்க பிரதிநிதியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர். எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று மு.க.ஸ்டாலின் வரை கடந்த 50 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த அனைத்து தலைவர்களுடனும் ஜி.கே. மணிக்கு அறிமுகம் உண்டு.

பாமகவில் முதல் பதவி
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, ஜி.கே.மணிக்கு வழங்கப்பட்ட முதல் பதவி தொண்டர் அணித் தலைவர் தான். அந்தப் பதவிக்கு பொருத்தமானவராக மணி செயல்பட்டார். 1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பென்னாகரல் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க.வின் வேட்பாளராக போட்டியிட்ட ஜி.கே.மணி அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். சங்கப் பணியாக இருந்தாலும், கட்சிப் பணியாக இருந்தாலும் இட்ட பணியை தட்டாமல் செய்பவர்.

பாமக தலைவர்
1998-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திண்டிவனம் எம்.ஆர்.எஸ் திருமண அரங்கில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது பா.ம.கவின் அடுத்த தலைவர் யார்? என்று ஒட்டுமொத்த தமிழக அரசியல் உலகமும் எதிர்பார்த்தது. ஊடகங்களில் பலரின் பெயர்கள் யூகிக்கப்பட்டன. ஆனால், ராமதாஸ் மனதில் இருந்தது ஒரே பெயர் தான். அந்த பெயர் தான் ஜி.கே.மணி. அவரைத் தான் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்தார் ராமதாஸ். அதைத் தொடர்ந்து அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொதுக்குழு நியமித்தது. அடுத்த 6 மாதங்களில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜி.கே.மணி தலைவராக தேர்வானார்.

25 ஆண்டுகள் பயணம்
அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நீடித்து வந்த அவருக்கு, கடந்த வாரம் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசினர். இந்த நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட இருக்கிறார். ராமதாஸின் நிழலாக இருந்து பல ஆண்டுகள் கட்சியை வழி நடத்திச் சென்ற ஜிகே மணிக்கு மூத்த ஆலோசகர், வழிகாட்டுதல் குழு தலைவர் உள்ளிட்ட ஏதாவது ஒரு சிறப்பு பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications