பிரம்மாண்ட மாநாடு.. அதற்கு அடுத்து "துணை முதல்வர் உதயநிதி".. ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்? அப்படியா?
சென்னை: தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்து இந்த மாற்றங்களை செய்தார். மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆனால் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை, தேர்தல் பணிகள், அவருக்கு தேவையான ஓய்வு, டெல்லி அரசியலில் ஸ்டாலின் செலுத்தும் கவனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு துணை முதல்வர் பதவியை உருவாக்குவது பற்றி சீனியர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார். ஸ்டாலின் இதை பற்றி கேட்டதும் நேற்று சீனியர்கள் ஸ்டன் ஆகி உள்ளனர். துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று சில சீனியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
அதே சமயம் மீட்டிங்கில் யாரை துணை முதல்வராக்குவது என்றும், துணை முதல்வர் பதவி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் இன்னும் சில சீனியர்கள் கூறி உள்ளனர். கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போதே துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இப்போதைக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் மீண்டும் துணை முதல்வர் பதவியை கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைகள் தொடங்கி உள்ளானாம். அதன்படி உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பான ஆலோசனைகள் உள்ளனவாம். முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சம் ஓய்வு, தேர்தல் பணிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அழைக்கப்படலாம் என்கிறார்கள்.
மாநாடு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக மாபெரும் மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 2007ல் முதல்வர் ஸ்டாலின்.. அப்போதைய திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்தார். இளைஞரணி வெள்ளிவிழா மாநாட்டை பிரம்மாண்டமாக ஸ்டாலின் நடத்தினார். அதேபோல் பிரம்மாண்டமாக திமுக சார்பாக அதன்பின் இளைஞரணி மாநாடு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில்தான் அதேபோல் பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டை உதயநிதி ஸ்டாலின் நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இடம் தேர்வு செய்ய பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கிறதாம். அதாவது கொங்கு மண்டலமா, மத்திய தமிழ்நாட்டிலா எங்கு மாநாட்டை நடத்துவது என்று ஆலோசனை செய்யப்பட்டதாம்.
கடைசியில் கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். இதில் கோவை, தருமபுரி, நாமக்கல் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் சேலம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாம். அதன்படி வரும் நவம்பர் இறுதியில் சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் இளைஞரணி மாநாடு நடத்தப்படும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு முடிந்ததும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications