திமுக துடியா துடிக்குதாம்.. 2 லீடர்கள் சொல்லிட்டாங்களே! “எடப்பாடி வேலை?”பின்னணியில் பரபர பிளான்கள்!
சென்னை : அதிமுகவின் முக்கிய தலைவர்கள், பாஜக கூட்டணி தொடர்பாக தற்போது வேறு வகையான வியூகத்தை கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தின் படியே பாஜக பற்றி அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனரா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாஜக + திமுக கூட்டணி அமையப்போவதாக பேசினார். அதற்கு திமுக, பாஜக ஆகிய கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
அதேசமயம், ஈபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார், சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பேசியுள்ளார். திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க துடியாய்த் துடிக்கிறது எனக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.

திமுக ரெடி ஆகிடுச்சு
நெய்வேலி என்.எல்.சி.க்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையப்போகிறது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரஸை கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது, திமுகவும் அதற்கு தயாராகிவிட்டது எனப் பேசினார்.

திமுகவில் சேர்ந்துவிட்டாரா?
சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்தக் கட்சி, எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. யாரோ சில மூன்றாம் கட்ட தலைவர்கள், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைக்கிறார்கள் என்று பேசுகிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஜெயக்குமார் பரபர
மேலும், பாஜகவின் நாராயணன் திருப்பதியும், திமுக அமைச்சர் மனோ தங்கராஜும், சி.வி.சண்முகத்தின் பேச்சை விமர்சித்துள்ளனர். அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோரின் கருத்துகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி கருத்து தெரிவித்து, மேலும் விவாதத்தைச் சூடாக்கியுள்ளார்.

துடியாய்த் துடிக்கிறாங்க
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் இன்னும் ஓராண்டில் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடித்து வருகிறது திமுக. எனவே அதை கண்கூடாக பார்த்துத் தான் சிவி சண்முகம் இப்படி கூறியுள்ளார். உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என உறவு வைத்துக் கொள்வதில் திமுக போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியலை வேறு எந்த கட்சியும் செய்யாது. அதை திமுக மட்டும் தான் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி வேண்டாம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கப் போவதாக பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் விரும்பவில்லை. பாஜக கூட்டணியால், சிறுபான்மை வாக்குகள் அதிமுகவை விட்டு பறிபோகின்றன, தங்கள் வெற்றி பாதிக்கப்படுகிறது, பாஜக கூட்டணி வேண்டாம் என அவர்கள் கருதுவதாக முந்தைய செய்திகளில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

2 தலைவர்கள்
வட மாவட்டங்களைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பாஜக உடனான கூட்டணியே காரணம் எனக் கருதுவதாகவும் தெரிவித்திருந்தோம். அதே இரண்டு தலைவர்களும் தற்போது, பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசியுள்ளனர். பாஜக - அதிமுக கூட்டணி தொடரக்கூடாது என்பதே இந்த தலைவர்களின் விருப்பமாகத் தெரிகிறது. தங்கள் பேச்சுகளின் மூலம் அவர்கள் இந்தச் செய்தியையே உறுதிப்படுத்தி வருகின்றனர்.

ஈபிஎஸ் வியூகம்
எனினும், இருவரும் தன்னிச்சையாக இவ்வாறு பேசவில்லை. எடப்பாடி பழனிசாமியின் கண்ணசைவுக்குப் பிறகுதான் இதெல்லாம் நடக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவின் நெருக்கடி வளையத்திற்குள் இருக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்து விட்டார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி, பாமக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து மெகா கூட்டணியை அமைக்க ஈபிஎஸ் தயாராகி விட்டார் என்கிறார்கள். அதன் காரணமாகவே, எடப்பாடி தரப்பில் இருந்து பாஜகவை வேறு பக்கம் தள்ளி விடும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன என்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி
அதிமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட சுனில் கனுகோலு தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். சுனில் மூலம், காங்கிரஸ் தலைமையுடன் எடப்பாடி பழனிசாமி டச்சில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவை கழற்றிவிட்டு, காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்தால், திமுக கூட்டணியிலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என ஈபிஎஸ் நினைக்கிறாராம். இதையொட்டியே அவரது ஆதரவாளர்களின் பேச்சுகள் இருக்கின்றன என்கிறார்கள்.

அதே கத்தி
இதுமட்டும் அல்லாமல், கடந்த காலங்களில், அதிமுகவை, பாஜகவின் அடிமைக் கட்சி என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளது திமுக. அதன் மூலம் பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியை தன் பக்கம் ஈர்த்தது. அதே கத்தியை கையில் எடுத்துத்தான் திமுகவை அதிமுக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள். தமிழகத்தில் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் திமுகவினர், டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அம்மா, அய்யா, தாயே என கெஞ்சுகின்றனர். மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சத்தமின்றி திமுக அரசு நிறைவேற்றி வருகிறது என்றெல்லாம் சிவி சண்முகம் விளாசுவதற்கு பின்னணி இதுதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications