வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர்
ஜெய்ப்பூர்: குவைத்தில் இருக்கும் கணவர் தனக்கு வாட்ஸ்அப்பில் 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்ததாக ராஜஸ்தான் பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார். நம் நாட்டில் 'முத்தலாக்' தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கோரக்இம்லி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் இக்பால். இவர் குவைத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மனுக்கு வயது 16. 2வது மகனுக்கு வயது 10.
ஆசிக் இக்பால் தனது மனைவி, 2 மகன்களை விட்டுவிட்டு குவைத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஆசிக் இக்பால் மீது அவரது மனைவி பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளார். வாட்ஸ்அப்பில் 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கணவர் ஆசிக் இக்பால் குவைத்தில் வேலை செய்து வருகிறார். நான், 2 மகன்களுடன் வசித்து வருகிறோன். என் கணவர் இந்தியா வரும்போதெல்லாம் என்னை துன்புறுத்துவார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பத்தை அனுபவித்து வந்தேன்.
சின்ன பிரச்சனை என்றாலும் என்னை அடித்து உதைத்தார். கணவரின் குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தினர். இதனால் நான் எனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறேன். இந்நிலையில் தான் குவைத்தில் உள்ள கணவர் வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துள்ளார்.
இதுபற்றி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஊர்மிளா கூறுகையில், '' பெண்ணுக்கு மே 17 ல் வாட்ஸ்அப்பில் முத்தலாக் கொடுத்துள்ளார் அவரது கணவர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
நம்நாட்டில் 'முத்தலாக்' விவாகரத்து என்பது சட்டப்படி குற்றமாகும். 2019-ம் ஆண்டு இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக மத்திய அரசு அறிவித்தது. 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications