ஆளை விடுங்க அய்யா.. ராமதாஸுக்கு ஒரேடியாக கும்பிடு போட்ட விஜய்! பழசு கண்ணு முன்ன வந்து போகுமில்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சேர்ந்ததால் திமுக பக்கம் செல்லலாம் என காய் நகர்த்தினார். தற்போது திமுகவும் கைவிட்ட நிலையில் பனையூர் பக்கம் ஒதுங்கலாம் என இருந்த ராமதாஸுக்கு டாட்டா காட்டிவிட்டது தவெக. இந்த நிலையில் தலித் வாக்கு வங்கியும் கடந்த காலங்களில் ராமதாஸின் செயல்பாடுகளும் தான் விஜயை கூட்டணி சேர விடாமல் தடுப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அரசியல் ரீதியாக கடுமையான தனிமையை எதிர்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது தான் உண்மையும் கூட..

மகன் அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில், மாற்று அரசியல் பாதைகளை தேடிய ராமதாஸின் முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

Ramadoss DMK TVK

ராமதாஸ் அரசியல்

பாமக உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்த பிறகு, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் அரசியல் ரீதியாக தனிமைப்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் குறித்து அவர் ஆராய்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த முயற்சிக்கும் தடையாக அமைந்தது, திமுக கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

திமுக தலைமை

கடந்த காலங்களில் ராமதாஸ் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் விசிக-பாமக இடையிலான கருத்து முரண்பாடுகள் காரணமாக, ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக வாயிலும் ராமதாஸுக்கு முழுமையாக திறக்கப்படவில்லை. இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு அடுத்ததாக கவனம் செலுத்தியது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி.

விஜய் பாமக கூட்டணி பேச்சு

இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, வட மாவட்டங்களில் பாமகவுக்கு உள்ள பாரம்பரிய வாக்கு வங்கி ஆகியவை இணைந்தால் அரசியல் ரீதியாக புதிய அரசியல் சூழல் உருவாகும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் கணித்தனர். இதன் மூலம் அன்புமணியையும், திமுக கூட்டணியில் பிரதான தடையாக இருக்கும் விசிக-யையும் ஒரே நேரத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளலாம் என்பதே அந்தத் திட்டத்தின் பின்னணி என கூறப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமதாஸ் ஆதரவாளர்களான ஜி.கே. மணி, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

கூட்டணி தோல்வி

ஆனால் இந்த பேச்சுவார்த்தை செய்திகள் வலுப்பெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் திடீரென எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்தது. அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க தயங்குவதற்கான காரணங்களாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, தலித் வாக்கு வங்கியில் எதிர்மறை பாதிப்பு ஏற்படலாம் என்ற கணிப்பு தான் காரணம். ஆரம்பத்தில் சமூக நீதி என பேசி வந்த ராமதாஸ் அடுத்தடுத்து பல்வேறு எதிர் நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்தார்.

விஜய்

குறிப்பாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக அவர் ஆரம்பித்த அனைத்து சாதி சங்கங்களுக்கான கூட்டமைப்பு, தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் உள்ளிட்டவை தலித் மக்களுக்கு எதிராகவே இருந்தது. மேலும் அவரது அணியில் இருந்த காடுவெட்டி குருவின் பேச்சு வெளிப்படையாக தலித் மக்களை விமர்சித்தது. இந்த சூழலில் ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால் சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்கள் வாக்குகள் கிடைக்காது என்பது விஜய்க்கு நன்கு தெரிந்த விஷயம்.

ராமதாஸ் - விஜய்

மேலும் மற்றொரு விவகாரமும் ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பதற்கு விஜய்க்கு தடையாக இருக்கிறது. அது விஜயின் சினிமா வாழ்க்கை. விஜய்யின் ஒவ்வொரு படம் வரும்போதும் ஏதாவது ஒரு வகையில் பாட்டாளி மக்கள் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. சர்க்கார் படம் வரை அந்த விவகாரம் நீண்டது. சில நேரங்களில் வெளிப்படையாகவே கூத்தாடி என விஜயை விமர்சித்தது பாமக. அதனால் தான் ராமதாஸ் உடனான கூட்டணி பேச்சு வார்த்தைகளை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டார் விஜய் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+