”தங்க வயல்” நகரத்தில் பதுங்கிய ராஜேந்திரபாலாஜி ? சல்லடை போடும் தனிப்படை போலீசார்
சென்னை: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் கோலார் சென்று தேடுதல் வேட்டையை திவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 3.10 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது ஏராளமானோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர் மீது ஆன்லைன் மூலமாகவும் ஏராளமானோர் புகார் அளித்து வருகின்றனர்.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடிப்பதற்காக ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் எண்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை
மேலும் மோசாடி தொடர்பாக முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாசன், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி பெங்களூரு டெல்லி என மாறி மாறி சுற்றி வருவதாகவும் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றனர் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

ஜாமீன் கோரி மனு
ஆனால் இதுவரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசும் தங்கள் தரப்பை விசாரிக்க வேண்டும் என கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

கோலரில் பதுங்கியுள்ளதாக தகவல்
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதிக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது . இதையடுத்து தனிப்படை போலீசார் கர்நாடகா சென்று அங்குள்ள உள்ளூர் போலீசார் உதவியுடன் கோலார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தீவிர தேடுதல்
அதேநேரம் ராஜேந்திர பாலாஜி தனது வழக்கறிஞர்களிடம் எவ்வாறு பேசுகிறார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து உள்ளதாகவும், அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடித்து போலீசார் செல்வதற்குள் அந்த தகவல் கிடைத்து அவர் வேறு இடத்திற்கு தப்பி விடுகிறார் எனவும், தற்போது கோலாரில் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications