"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க".. பிரேமலதா வந்த பாரம்பரியம் இது!
Recommended Video

சென்னை: பிரேமலதா விஜயகாந்த்தின் கோபத்திற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. தனது தலைவர் விஜயகாந்த்தை அவர் அப்படியே பின்பற்றுகிறார். அவ்வளவுதான்.
விஜயகாந்த் செய்தியாளர்கள் கூட்டத்தை எப்படி சந்தித்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். எந்த செய்தியாளர் கூட்டத்தையும் அவர் சுமூகமாக முடித்ததே இல்லை என்று கூறும் அளவுக்கு கோபமும், கொந்தளிப்பும் தாண்டவமாடும்.
ஒரு கட்சியின் செயல்பாடுகளை, முடிவுகளை, கொள்கைகளைத்தான் செய்தியாளர்கள் தலைவர்களிடம் கேட்கிறார்களே தவிர வேறு எந்த தனிப்பட்ட விஷயத்தையும் அரசியல்வாதிகளிடம் கேட்பதில்லை. ராஜாஜி காலம் முதல் நேற்று வந்த ரஞ்சித் வரை செய்தியாளர்கள் இப்படித்தான் நடந்து வருகிறார்களே தவிர யாரும் தனிப்பட்ட முறையில் யாரையும் கேள்வி கேட்டதில்லை.

விதி விலக்கு விஜயகாந்த்
ஆனால் விஜயகாந்த் மட்டும் இதில் விதி விலக்கு. கேள்விகளுக்கு அவர் பெரும்பாலும் நேரடியாக பதில் சொன்னதில்லை. அவர் சொல்லும் பதில் புரியாமல் போகும்போது செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்டால் கோபம் வந்து விடும். கோபம் வந்தால் உடனே அதை வெளிக் காட்டி விடுவார், கொட்டி விடுவார்.

பொது நாகரீகம்
நம்மை யாராவது கேட்டால் கோபம் வருவது இயல்புதான். ஆனால் மூத்த தலைவர்கள், முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அதை அணுகும் முறையே லாவகமாக இருக்கும். கருணாநிதியிடம் எப்படி குண்டக்க மண்டக்க கேட்டாலும் கூட அதை அவர் லாவகமாக செய்தியாளர்களிடமே திருப்பி விடுவார். இறுக்கம் போய் கலகலப்பாகி விடும் அந்த இடமே.. அதுதான் தலைவருக்கு அழகு.

தவறான பேச்சு
பெரும்பாலும் எல்லாத் தலைவர்களும் இப்படித்தான். புதிய அரசியல் தலைவரான கமல்ஹாசனும் செய்தியாளர்களை லாவகமாக எதிர்கொள்வார். எப்படி மடக்கி கேட்டாலும் அதை லாவகமாக சமாளிப்பார். தெரியாவிட்டாலும் ஏதாவது சொல்லி சமாளிப்பாரே தவிர வாடா போடா என்றெல்லாம் அவர் போனதே இல்லை. மரியாதைக் குறைவாக நடந்ததில்லை. முகச் சுளிப்பைக் கூட காட்டியதில்லை.

ருத்ர தாண்டவம்
ஆனால் விஜயகாந்த் 2, 3 கேள்விகள் சீரியஸாக கேட்டு விட்டால் போதும் சிலபஸுக்கு வெளியிலிருந்து கேள்வி கேட்டால் வரும் டென்ஷன் போல ருத்ரமாகி விடுவார். அதன் பிறகு அவர் அவராகவே இருக்க மாட்டார். எப்படியெல்லாம் அவதாரம் எடுப்பார் என்பது உலகுக்கே தெரியும்.. அதன் ஒரு துளி உதாரணம்தான் இந்த சம்பவம்.

தூக்கி அடிச்சுருவேன்
டெல்லியில் நடந்த பிரஸ் மீட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் கோபத்தைக் காட்டினார் விஜயகாந்த். குண்டக்க மண்டக்க பேசுவேன், தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க, நீ என்ன பெரிய கொம்பா என்று அவர் பேசியது வரலாறு...! இன்று அதே பாணி கோபத்தையும் கொந்தளிப்பையும் கொதிப்பையும் பிரேமலதா விஜயகாந்த் காட்டியுள்ளார். தலைவர்களுக்குரிய இலக்கணத்தை காலில் தூக்கிப் போட்டு மிதித்த பாரம்பரியத்தை உருவாக்கிய கட்சி. அந்த வழியில் வந்தவர் என்பதால் பிரேமலதா விஜயகாந்த் பேச்சில் ஆச்சரியம் இல்லைதான்.












Click it and Unblock the Notifications