100 சதவீத வாக்களிப்பு! திருவான்மியூர் கடற்கரையில் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்த பாரா கிளைடிங்!
சென்னை: தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் பாரா கிளைடிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியில் உள்ளன.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் பிரச்சாரம் அடிக்கும் வெயிலை விட சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சென்னை மாவட்ட தேர்தல் சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், திருவான்மியூர் கடற்கரையில் பாரா கிளைடிங் செய்து விழிப்புணர்வு நடத்தினார். ஒரு பாராசூட்டில் அந்தரத்தில் பறந்த படியே சென்றார். சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் பேசுகையில் சென்னையில் 100 சதவீத வாக்குப் பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
40 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவான 35 வாக்குச் சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தீவுத்திடல் பகுதி, நிர்வாக கட்டடங்கள், குடிசை பகுதிகளில் வாக்குப் பதிவு குறைவாக உள்ளது. அது போல் ராணுவ பணியாளர்கள், திநகர், பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் வியாபார பிரமுகர்கள் முறையாக வாக்களிக்கவில்லை.
அதனையும் சரி செய்ய விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் வாக்குப் பதிவு குறைவாக இருந்துள்ளது. மேலும் 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது.

வெயில் பாதிப்பு இருப்பதால் பந்தல், குடிநீர் வசதி போன்றவை செய்யப்படுகின்றன. இதுவரை தபால் ஓட்டு 1,175 பதிவாகியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை வரை தபால் ஓட்டு போடலாம். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் முடிந்து விட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் 600 வாக்குச் சாவடிகள் உள்ளதால் அங்கு மட்டும் இன்று இரவு வரை சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications