அகவிலைப்படி உயர்வு மட்டுமே கிடைத்தது.. அதுக்கும் போராட்டம்! ஜனவரியில் போராட தயாராகும் ஜாக்டோ ஜியோ!
சென்னை : திமுக ஆட்சியில் அகவிலைப்படி உயர்வைத் தவிர வேறு எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை அதையும் போராடி தான் பெற வேண்டி இருந்தது எனவும், வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதி மாலையில் தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திமுக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சியைப் பிடித்து நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

திமுக அரசு
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் எனவும் தமிழக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காக தாங்கள் களப்பணியாற்றியதாக அரசு ஊழியர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். இது தொடர்பாக கடந்தாண்டு ஜாக்டோ ஜியோ சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாக்டோ ஜியோ
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பற்றி பொதுமக்களிடையே பகை உணர்வை வளர்க்கும் விதமாக நிதி அமைச்சர் பேசி வருவதாக ஜாக்டோ ஜியோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில் 65 பைசா அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் செயல்படுகிறது என பேசியதாகவும் , இதனால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருந்த நிலையில் முதல்வரிடமே புகார் அளிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டம்
சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் அது தொடர்பான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சியில் அகவிலைப்படி உயர்வைத் தவிர வேறு எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை அதையும் போராடி தான் பெற வேண்டி இருந்தது எனவும், வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதி மாலையில் தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ்,"தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் நிலுவையில் உள்ள அகவிலை படித்தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியும் மதிப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் அரசு துறைகளில் அவுட்சோர்ஸ் முறையில் பணி நியமன அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போராட்டம்
அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 ஜனவரி 5ஆம் தேதி தமிழக முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். திமுக ஆட்சியில் அகவிலைப்படி உயர்வைத் தவிர வேறு எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. அகவிலைப்படி உயர்வையும் போராடி தான் பெற வேண்டி இருந்தது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராத பட்சத்தில் 2023 ஜனவரி 8ஆம் தேதி மதுரையில் ஜாக்டோ ஜியோ வின் உயர்மட்ட குழு கூட்டம் கூடி அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த ஆர்ப்பாட்டத்தை தீவிர படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications