‘ஜனநாயகன்’ எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது.. நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு கடும் ஆட்சேபம்!
சென்னை: 'ஜனநாயகன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எடிட்டர் உமா சங்கருக்கு முன்ஜாமீன் வழங்க தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை சிக்கல்களால் தள்ளிப்போனது.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்கைக் குழு படத்தை ஆய்வு செய்தது. விரைவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முழுப்பதிப்பும் இணையதளங்களில் சட்ட விரோதமாகக் கசிந்தது.
இது படக்குழுவினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக படம் வெளியான அனைத்து இணையதள முகவரிகளையும் கண்டறிந்து, அவற்றை சைபர் க்ரைம் போலீசார் முடக்கினர்.
மேலும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் திரைப்படம் கசிய மூளையாகச் செயல்பட்டது யார் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்துக்கான எடிட்டிங் ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், திரைத் துறையில் தனக்கு யாரையும் தெரியாது, எந்த தொடர்பும் இல்லை. இதய நோயாளியான தான், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்; ஜனநாயகன் படத்தை யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை; யாருக்கும் படத்தை பகிரவும் இல்லை, படம் வெளியானதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளனர்; எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்ய இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தெரிவித்தார். முக்கிய குற்றவாளியான இவர் படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான பிறகு இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
வழக்கில் கைது செய்யப்பட்டவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications