இனிப்பான அறிவிப்புக்கு இதயம் கனிந்த நன்றி! கம்பீர ஸ்டாலின் என புகழாரம் சூட்டும் ஜவாஹிருல்லா!
சென்னை: சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டால், மாநில அரசு வழங்கும் என அறிவித்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரை 'கம்பீர ஸ்டாலின்' என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கல்வி உதவித் தொகை
ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாணவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்திலிருந்து வழங்கி வந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை திடீரென்று இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது. அநீதியான இந்த முடிவை அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் கண்டித்தன.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த முடிவை கண்டித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் டிசம்பர் 7.2022அன்று பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினார். நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை மீண்டும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரினார். ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

4 லட்சத்து 49,559 மாணவர்கள்
2021 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 559 மாணவர்களுக்கு 86.76 கோடி தமிழ்நாட்டில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஒன்றிய அரசு திடீரென இந்த உதவி தொகையை நிறுத்தியது. சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் செயலாக இருந்தது. அந்த ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை மிகப் பெரிய ஊக்கமாகவும் பள்ளிக்கல்வியை எழுதி முடிப்பதற்கு உதவும் சாதனமாகவும் உதவியது.

இனிப்பாக அறிவிப்பு
இந்நிலையில் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துவிட்ட உதவித் தொகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்திய அன்பின் கிறிஸ்மஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக தமிழ் நாடு முதலமைச்சருக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம் .












Click it and Unblock the Notifications