ஜெயலலிதா நினைவுநாள்... ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு சவால்விட்டு மாஸ் காட்ட தினகரனுடன் ஸ்கெட்ச் போட்ட சசிகலா!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுகவில் தங்களது அணியே வலிமையானது என்பதை வெளிப்படுத்த சசிகலா தரப்பு மும்முரமாக இருக்கிறதாம். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை நேற்று மாலை சசிகலா அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் உட்கட்சி மோதல் இப்போது புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த இரு பதவிகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கேட்டு வந்த ஒருசிலர் கடுமையாகத் தாக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று ஜெயலலிதா நினைவு நாள்.. ஓபிஎஸ்- ஈபிஎஸ், சசிகலா- தினகரன் தனித்தனியே மரியாதை

டிச.7-ல் தேர்தல்
மேலும் அதிமுகவின் இந்த திடீர் உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரத்தில், வன்முறைகள் நிகழ்ந்தால் உட்கட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற உள்ளது.

சசிகலா அறிக்கை
இதனிடையே அதிமுகவின் இந்த மாற்றங்கள் தொடர்பாக சசிகலா நாள்தோறும் அறிக்கை கொடுத்தும் வருகிறார். சசிகலா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், உட்கட்சி தேர்தலில் விருப்ப மனு வாங்க சென்ற அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துள்ளார்; தங்களுக்கு கொடிபிடிக்கும் தொண்டர்கள்தான் தேவை- தடி எடுக்கும் குண்டர்கள் கட்சிக்கு தேவை இல்லை; அதிமுக தொண்டர்கள் நிலையைப் பார்த்து எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ணீர் வடிப்பார்கள் என குமுறி இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஜெயலலிதா நினைவு நாள்
ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர் போலீசார். இது தொடர்பாக நேற்று மாலை தினகரனை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தினகரனின் அமமுக கட்சி இருப்பதால் அதிமுகவுக்குள் எளிதாக நுழையமுடியவில்லை; ஆகையால் அந்த கட்சியை கலைக்கும் அறிவிப்பை தினகரன் வெளியிட வேண்டும் என சசிகலா கூறியிருந்தாராம். ஆனால் அதனை தினகரன் ஏற்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்தார் சசிகலா என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் திடீரென தினகரனை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சசிகலா.

தினகரன்-சசிகலா ஆலோசனை
இந்த ஆலோசனையின் போது ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வரும் போது நிச்சயம் மாஸ் காட்டும் வகையில் தொண்டர்களை திரட்டுவார்கள். அவர்களைவிட நமக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக கொடிகளுடன் தொண்டர்கள் திரள வேண்டும். அதற்காக என்ன செய்ய முடியுமோ அதனை செய்தாக வேண்டும் என கூறினாராம் சசிகலா. ஜெயலலிதா நினைவு நாளான இன்று அதிமுகவில் எந்த அணிக்கு பெருங்கூட்டம் கூடுகிறது என்கிற மாஸ் காட்டும் கூட்டமாக இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.