ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா நிறைவேற்றம் - பாஜக எதிர்ப்பு;பாமக சைலண்ட்
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
சென்னை: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் திருவல்லிக்கேணி சமுதாய நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் திருப்பெயரை நீக்குவது அரசியல் காழ்ப்புணர்வின்றி வேறில்லை என்று கூறினார். மசோதா குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கேட்டோம் திமுகவினர் மறுத்தனர்.
இந்தியாவிலுள்ள முதல்வர்களிலேயே கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர் ஜெயலலிதா. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை மாற்றங்களை கொண்டு வந்தார். 2011ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாயில் 4ல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கினார். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தையே காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். மாணவர்களுக்கு 16 வகை இலவச உபகரணங்கள் தந்தவர் ஜெயலலிதா.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு 27 சதவீதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கையை , 50 விழுக்காடுக்கு மேல் உயர்த்தி தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாக்கியவர் ஜெயலலிதா. அவரை தமிழக மக்கள் கல்வித் தாயாகக் கருதினார். அம்மா உணவகம் பெயரை மாற்றவில்லை என்கிறீர்கள், இன்று இருக்கும் பிரச்சனை விழுப்புரம் பல்கலை பெயர் பிரச்சனைதான். இப்போதுதான் பல்கலையை உருவாக்கினோம். அதற்கான நிதி, இடத்தை ஒதுக்க வேண்டியது தற்போதைய அரசின் வேலை என்று கூறினார்.
ஜெயலலிதா பெயரை கொண்டிருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு இந்த சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என்று கூறினார்.
இசை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தில் ஜெயலலிதா பெயரை நாங்கள் மாற்றவில்லை. உயிருடன் இருக்கும்போது பெயர் வைக்கக்கூடாது என இருக்கும் போது அம்மா உணவகத்துக்கு பெயர் வைத்தது யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் பெயரை மாற்றியது அதிமுகதான் என்றும் எங்களுக்கு அது போன்று நோக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். பா.ம.க. எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்காத நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரின் விவாதத்துக்குப்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications