பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹20 உயரும்? தேர்தல் முடிந்த கையோடு விலை உயர்வு? மத்திய அரசு முக்கிய தகவல்
டெல்லி: மேற்கு வங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயரலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள சூழலில், அதுபோல விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வளைகுடாவில் அமெரிக்காவும் ஈரானும் நேரடியாகத் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் கூட அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. இந்த பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

அச்சம்
இதனால், இந்தியாவில் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் விலை உயரும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வந்தது. சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இந்த வதந்திகளால் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் அவசரம் அவசரமாகப் பெட்ரோல் பங்குகளில் குவியத் தொடங்கினர்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆந்திராவின் பல பகுதிகளில் பெட்ரோல் தேவை 30 முதல் 33 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் சுமார் 400க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் நோ ஸ்டாக் பலகையை மாட்ட வேண்டிய சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
மத்திய அரசு திட்டவட்டம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சில இடங்களில் மக்கள் பதற்றத்தில் அதிகப்படியான பெட்ரோலை வாங்கிச் சேமிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. மாநில அரசுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அனைத்து எரிபொருள் நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இருப்பு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சப்ளையை துரிதப்படுத்தியுள்ளோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி
அரசு விலையை உயர்த்தப் போவதில்லை என்று கூறினாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச விலையை விடக் குறைந்த விலைக்கு இந்தியாவில் எரிபொருளை விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ₹2,400 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுஜாதா சர்மா முன்னதாக அளித்த தகவலின்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு ₹20 வரை இழப்பைச் சந்திக்கிறது. டீசலில் ஒரு லிட்டருக்கு கணிசமான இழப்பைச் சந்தித்து வருகின்றன. 2022 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் சில்லறை விற்பனை விலை மாற்றப்படாமல் அப்படியே இருப்பதும் இந்த இழப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
எகிறிய கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் இதற்கு முக்கியக் காரணமாகும். கடந்த பிப்ரவரி 28ம் தேதி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் அளித்த பதிலடி காரணமாகச் சூழல் மோசமானது. குறிப்பாக உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கடந்த ஆண்டு 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், இந்த மாதம் சராசரியாக 114 டாலரைத் தாண்டியுள்ளது. இப்போது கூட சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் எகிறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு விலையை உயர்த்தப் போவதில்லை என்று உறுதியளித்திருப்பது சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதிதான். இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது, எத்தனை நாட்களுக்கு விலையேற்றத்தைத் தள்ளப் போட முடியும் என்பதும் முக்கியமான கேள்வியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications