செம திருப்பம்.. புதுச்சேரியிலிருந்து கிளம்பும் தமிழிசை.. புதிய துணை நிலை ஆளுநர் இவரா? பரபர தகவல்
சென்னை: யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான ஒரு போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து, அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய கிரண் பேடி, ஒரு மாஜி போலீஸ் அதிகாரி என்பது எல்லோருக்கும் தெரியும்.
இப்போது அதே போன்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாம் மத்திய அரசு.

நேர்மையான அதிகாரி
காவல்துறை சர்வீசில் நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர் திரிபாதி ஐ.பி.எஸ். ! தமிழகத்தின் காவல்துறை தலைவராக (சட்டம் ஒழுங்கு டிஜிபி) இருந்த அவர், ஜூன் 30-ந்தேதி பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இவரது ஓய்வுக்கு பிறகு, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம்
திரிபாதியை பொறுத்தளவில் பீகார் இவருக்கு சொந்த மாநிலமாக இருந்தாலும், ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்புகிறார். மத்திய அரசின் உள்துறை அதிகாரிகளும், பிரதமர் அலுவலக உயரதிகாரிகளும் திரிபாதி மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள்.

ஊழல் தடுப்பு ஆணையம்
இந்த நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (செண்ட்ரல் விஜிலென்ஸ்) காவல்துறை சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர் பதவி ஒன்று காலியாக இருக்கிறது. அந்த பதவியில் திரிபாதியை நியமிக்க பிரதமர் அலுவலகம் ஆலோசிப்பதாகவும், அதுகுறித்து திரிபாதியிடம் விவாதித்திருப்பதாகவும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

தமிழிசைக்கு பதில் திரிபாதி
இதற்கிடையே, தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசையிடம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே துணை நிலை ஆளுநராக ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி இருந்துள்ளதால், தமிழிசையிடம் கூடுதலாக உள்ள துணை நிலை ஆளுநர் பதவியில் திரிபாதியை நியமிக்கலாம் என மத்திய அரசு விவாதிப்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டச் சிக்கல் இல்லை
ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவரை அதே மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க மாட்டார்கள். திரிபாதி பூர்வீகம் பீகார் என்பதாலும், அவர் தமிழ்நாட்டில் பணியாற்றியவர் என்பதாலும், அவரை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்க தடை எதுவும் கிடையாது. ஆனால், ஊழல் தடுப்பு ஆணைய உறுப்பினரா, அல்லது துணை நிலை ஆளுநரா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications