பிப்.26-ல் சூமோட்டோ வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முதல் தீர்ப்பு-அமைச்சர் ஐ.பெரியசாமி தப்புவாரா?
சென்னை: வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்குகளில் தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்து தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய தாமாகா முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூமோட்டோ வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வருகிறார்.
ஐ.பெரியசாமி வழக்தில் நாளை மறுநாள் தீர்ப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் விசாரணை முடிவடைந்து நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. 2006-2011-ல் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அப்போது 2008-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக அமைச்சர் ஐ.பெரியசாமி ஒதுக்கினார் என்பது வழக்கு. 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இவ்வழக்கில்தான் நாளை மறுநாள் (பிப்ரவரி 26) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க இருக்கிறார்.
பொன்முடி பதவி இழப்பு: ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு ஒன்றில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. அடுத்த சில மாதங்களிலேயே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சீனியர் அமைச்சருமான ஐ.பெரியசாமி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இருக்கும் இதர வழக்குகள் விவரங்கள்:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: 2006-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சூமோட்டோ வழக்காக விசாரித்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி: தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2 சொத்து குவிப்புகள் வழக்கு போடப்பட்டன. 2006-2011 ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பொன்முடி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இந்த விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்குகள்: 2006- 2011-ல் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தனர் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி வழக்கு: 2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications