போலி மரியாதை கொடுத்த தலைவர்கள்.. கேலி செய்து நடித்து காட்டிய ஜெ.. கேசி பழனிசாமி சுவாரஸ்ய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைவர்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதாவுக்கு போலி மரியாதையை கொடுத்தார்கள். இதை அவரே என்னிடம் சொல்லியுள்ளார். மேலும் அவர்களை போல் நடித்தும் காட்டினார் என முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி சுவாரஸ்யமான தகவலை சொன்னார். இந்த போலி மரியாதைகளை அவர் அறவே வெறுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் எம்பி கேசி. பழனிச்சாமி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: உங்களுக்கும் எம்ஜிஆருக்குமான பழக்கம் எப்படி இருந்தது. அந்த காலத்தில் கட்சி எப்படி இருந்தது?

: நான் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரெல்லாம் எனக்கு ஜூனியர்கள். அப்போதுதான் எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவை மாவட்ட இளைஞரணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அண்ணா திமுகவில் எல்லா பொதுக் குழுக்களிலும் கலந்து கொண்டேன். முதல்வராக இருந்த எம்ஜிஆர் எங்களை போன்ற மாணவரணியின் சிலருடன் சத்யா ஸ்டூடியோவில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது திருநாவுக்கரசர்தான் இளைஞரணியின் பொறுப்பாளர். அந்த நிகழ்வில் இந்த இளைஞரணியை சேர்ந்தவர்கள்தான் இந்த இயக்கத்தை வழிநடத்துவார்கள். அது போல் இந்த இயக்கத்திற்கு என்று சோதனை வந்தாலும் நீங்கள் இந்த இயக்கத்தை முன்னின்று பாதுகாக்க வேண்டும் என எம்ஜிஆர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார். 1984 ஆம் ஆண்டு காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பை வழங்கினார். இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டேன். 1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு அவர் மறைகிற வரை அவருடன் பயணித்தேன். பின்னர் 1988 ஆம் ஆண்டு அந்த சட்டசபை கலைக்கப்பட்டது.

K.C.Palanisamy says that interesting info on Jayalalitha

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெ அணி, ஜா அணி என இந்த இயக்கம் பிளவுப்படும் போது நான் எம்எல்ஏவாக இருந்தேன். ஜெயலலிதா, நான் உள்ளிட்டோர் இளைஞரணியில் பொறுப்புக்கு வந்தது 1982 கால கட்டங்களில்தான். அப்போதுதான் ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதிமுக பிளவுப்பட்ட போது திமுக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முடிவெடுத்தார்கள். இதை ஜெயலலிதா ஏற்றார். அப்போதும் கூட இரட்டை தலைமை என்ற ஒரு சூழல் வந்தது. ஜானகி ஒதுங்கிக் கொண்டார். இதையடுத்து ஜெயலலிதா பொதுச் செயலாளராக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர்தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடித்துவிட்டு வந்தவுடன் பொது நிகழ்வுகளில் பேசாத அவர் என் திருமணத்தில்தான் மேடையில் மைக்கில் பேசினார். எம்ஜிஆரை நான் எப்போதும் சந்திப்பேன், எனக்கு தடையே கிடையாத நிலை இருந்தது. இந்த இயக்கத்தை தூணாக இருந்து தாங்கி பிடிக்க வேண்டும் என எம்ஜிஆர் எங்களிடத்தில் தெரிவித்துள்ளார். அதனால்தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய பல நடவடிக்கைகளில் நான் இறங்கினேன்.

K.C.Palanisamy says that interesting info on Jayalalitha

கே: ஜெயலலிதாவுக்கு உங்களுக்குமான நட்பு எப்படி இருந்தது, நினைவுகள் குறித்தும் சொல்லுங்கள்

: ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட போதுதான் எங்களை போன்றோர் இளைஞரணியில் பொறுப்பாளராக இருந்தோம். பெரும்பாலும் இளைஞரணியில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா 1984 ஆம் ஆண்டு தேர்தலின் போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். நான் போட்டியிட்ட தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா காங்கேயம் தொகுதிக்கு வந்த போது வெறும் 5000 ரூபாய் செலவு செய்து போட்ட பந்தலில் அமர்ந்து பேசினார். ஆனால் பின்னாளில் எல்லாம் 1 கோடி செலவு செய்தார்கள். ஜெயலலிதாவை சுற்றி இருந்து எல்லாவற்றையும் செய்தோம் என சசிகலா சொல்வதெல்லாம் பொய். ஜா - ஜெ அணி இணைப்பின் போது நான் ஜெயலலிதாவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அணிகள் இணைந்த பிறகு என்னை திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். இந்தியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். முதலிடத்திற்கே வந்திருப்பேன். அப்போதெல்லாம் ஓட்டு போட நிறைய பேர் இருப்பார்கள். அவர்களை எல்லாம் வாக்குச் சாவடிக்கு சேர்க்கும் அளவுக்கு வாகனங்களை நிறைய ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்போதுதான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு வருகிறார்.

K.C.Palanisamy says that interesting info on Jayalalitha

மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் தந்தை திருச்செங்கோட்டில் கிளைச் செயலாளராக இருந்தார். தங்கமணியெல்லாம் உறுப்பினராக இருந்தாரா என தெரியவில்லை. செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்தார். என்னை பொருத்தவரை கட்சியினரிடம் சகஜமாகவே ஜெயலலிதா பழகினார். அவர் பவ்யம் காட்டினார் என்பதெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவே என்னிடம் சொல்லியிருக்கிறார், "நீங்கள் மற்றவரை போல் இல்லை, உங்களிடம் போலி மரியாதை இல்லை. நீங்கள் வந்தீர்கள் எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுவீர்கள். மற்றவர்கள் எல்லாம் உட்கார சொன்னாலும் உட்காருவதில்லை. என்னை சந்தித்துவிட்டு போனாலும் அப்படியே ரிவர்ஸில் போகிறார்கள்" என கூறிய ஜெயலலிதா அதை அப்படியே நடித்தும் காட்டினார். 1997- 2000 கால கட்டங்களில் போட்டி அதிமுக என ராஜகண்ணப்பன் போன்றோர்களால் உருவாக்கப்பட்ட போது என்னை அடிக்கடி அழைத்து ஆலோசனை நடத்துவார். 1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெறும் 4 இடங்களில்தான் வென்றது. இரட்டை இலை முடக்கப்பட்டுவிடுமோ என்ற சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன.

என்னை மாவட்டச் செயலாளராக்கவும் ஜெயலலிதா என்னிடம் கேட்டார். எனக்கு நிறைய தொழில்கள் இருந்ததால் என்னால் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட இயலாது என சொன்னேன். அதே நேரத்தில் அவருக்கு தேவையான உதவிகளையும் நான் வழங்க தயார் என்றேன். 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்றவுடன்தான் 2001 இல் இருந்து சசிகலாவின் கை ஓங்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஓபிஎஸ் உள்ளிட்டோர் உள்ளே வந்தனர். 2011 தேர்தலின் போது திமுகவில் தற்போது அமைச்சராக இருந்த முத்துச்சாமி திமுகவுக்கு சென்றதால் அந்த பாதிப்புகளை சரி செய்ய என்னை ஈரோடு கிழக்கில் போட்டியிட சொன்னார். நானும் மனுத்தாக்கல் செய்திருந்தேன். அப்போதுதான் ராவணன் என்பவர் உள்ளே நுழைந்து கொங்கு மண்டலத்தில் குறுநில மன்னராக வலம் வந்தார்.

நான் எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் யார் கட்சியின் தலைவரோ அவருக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன். பதவிக்காக சீட்டுக்காக யார் காலையும் பிடிக்க மாட்டேன். 2002 இல் ராஜ்யசபா எம்பியாக்க ஜெயலலிதா நினைத்திருந்தார். ஆனால் நான்தான் அந்த பட்டியலை மாற்றிவிட்டேன் என ராவணனே நிறைய இடங்களில் சொல்லியுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+