கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று முழக்கமிட்ட அண்ணா... 53வது நினைவு தினம் இன்று
பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தன் வசிய குரலால்... கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற கொள்கையை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை. இவர் 1909 ஜனவரி 14-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடைய இவர் ஒரு இதழாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளர்.
நாவல், கட்டுரை, நாடகம் என பலவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் இன்று வரை பலராலும் வாசிக்கப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் இந்திய அரசியல் தளத்தில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்பதை முன்வைத்தவர்.

எல்லோருக்கும் அண்ணா
சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதுரை தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான். பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்தார்.

திராவிட முனேற்ற கழகம்
அண்ணாவை விட்டுப் பிரிந்து திராவிட முனேற்ற கழகம் என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு
அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை"......என்பதே அந்தப் பேச்சு. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா.

அண்ணாவின் மரணம்
தமிழக அரசியலில் பிரதான ஆளுமையாக திகழ்ந்த இவர், முதல்வராக இருந்த போது கடந்த 1969 பிப்ரவரி 3ஆம் தேதி காலமானார். அண்ணாவின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அண்ணா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை.. அவர் சொன்ன கருத்துக்களும் தமிழகத்தையும் தமிழக மக்களையும் விட்டு மறையவில்லை.












Click it and Unblock the Notifications