''சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா?''.. கமல் ஆவேசம்!
சென்னை: திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும் என்று கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் தலித் சமூகத்தினர் அண்மையில் திருவிழாவை நடத்தினர்.
ஆனால் வேறு ஒரு ஜாதியினர் தங்களுடைய அனுமதி பெறாமல் தலித் மக்கள் திருவிழா நடத்தி விட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்தனர்.

ஜாதி பஞ்சாயத்து கூட்டம்
இதனை தொடர்ந்து போலீசார் அந்த கிராமத்துக்கு வந்தனர். தலித் மக்கள் திருவிழாவுக்காக கட்டி இருந்த ஒலிபெருக்கிகளை அதிரடியாக அகற்றி பறிமுதல் செய்தனர். இதற்கிடையே தங்களது அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியது குற்றம் என கூறி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த இன்னொரு ஜாதியினர் பஞ்சாயத்தை கூட்டினர்.

காலில் விழ வைத்தனர்
இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் திருவிழாவை முன்னின்று நடத்தியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கொடூரமான முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலித் பெரியவர்கள் இன்னொரு ஜாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் கைது
தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த நவீன யுகத்திலும் அருவருத்தக்க ஜாதிவெறி பஞ்சாயத்து நடத்தி சக மனிதர்களை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கமல்ஹாசன் கண்டனம்
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ' இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications