“எந்தக் கல்லூரியில் ராமர் இஞ்ஜினியரிங் படித்தார்?” - இறுதிவரை பகுத்தறிவு பேசிய கருணாநிதி
சென்னை: விருப்பமான ஹீரோவின் திரைப்படம் வெளியானால், ரசிகர்கள் 'ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ' பார்க்கும் கலாச்சாரம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறது.
திரையரங்கத்திற்குள் திபுதிபுவென புகும் ரசிகர்கள், விசில் பறக்க படத்தைப் பார்த்துவிட்டு பெரிய உற்சாகத்தோடு வெளியே வரும் காட்சியை இன்றைக்கும் பார்க்கமுடிகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் வழிபாடு என்பது தியாகராஜ பாகவதர் தொடங்கி இன்றைக்கு இளம் நடிகர் தனுஷ்வரை நீண்டு நிலைத்திருக்கும் ஒரு கலாச்சாரம்.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னால் திரையில் தெரிந்த ஒரு டயலாக் ரைட்டரின் பெயரைப் பார்த்து ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிரிபுதிரியானது என்றால் இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அந்த வசனங்கள் அறிவாயுதத்தை தமிழ்நாட்டில் பரப்பியது. 'எந்தக் காலத்திலடா அம்பாள் பேசினாள்?' என கேள்வி எழுப்பியது. 'கோயில்களை வேண்டாம் எனச் சொல்லவில்லை; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்றே சொல்கிறேன்" என்று பகுத்தறிவுப் புயலை வீசியது.

அதைக் கேட்ட ரசிகர்கள், திரையில் 'கதை வசனம் மு.கருணாநிதி' என்பதைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இவருக்கு முன்னால், ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்ததே இல்லை.
பகுத்தறிவு வசனங்களால் அனல் கக்கிய இவரது பேனா, இதமான வசனங்களைத் தென்றலாகவும் வீசி இருக்கிறது.
'பராசக்தி'யில் எரிமலைக் குழம்பாக வெடித்த இவர்தான், 'பூம்புகார்' போன்ற காவியங்களுக்கு வசனம் எழுதும்போது அருவியாகக் கொட்டினார்.

'பூம்புகார்' படம் துவங்குவதற்கு முன்னதாக, பெரிய சால்வையைப் போர்த்தியபடி தோற்றம் தந்த மு.கருணாநிதி, மெல்ல நடைபோட்டு திரை ரசிகர்களிடம் சில நேரம் உறவாடினார்.
"தமிழ் மீது உள்ள அன்பால்; பற்றால்; பாசத்தால்; தமிழ் காத்து, தமிழரின் நலன் காக்கும் தொண்டர்க்குத் தொண்டனாகிய நான். மணம் கமழும் தமிழே, மனம் கவரும் தாயே! இன்ப மொழியே; அன்பு விழியே; உயிரான தமிழே!
உலகில் உயர்வான மொழியே! உனைப் போற்றிப் புகழ்வதன்றி, வேறு பணி எனக்கிலையே எனும் உற்சாக மிகுதியால், தித்திக்கும் தீந்தமிழ்ச் சாறெடுத்து, கற்பனைத் தேன் கலந்து, கன்னித்தமிழ் காவியமாம் 'பூம்புகார்' எனும் திரையோவியத்தை உங்கள்முன் படைக்கின்றேன்" என்று பேசப்பேச அவரது ரசிகர்கள் கேட்டு அப்படியே உருகி வழிந்தனர்.
இப்படி சினிமாவில் மட்டும் கருணாநிதி பகுத்தறிவு வசனங்களை எழுதவில்லை. ஒரு காலத்தில் திமுகவிலிருந்தவர்தான் சிவாஜி கணேசன். அதாவது இந்தச் சம்பவம் 1955களில் நடந்தது.

திமுகவில் இருந்துகொண்டு அவர் திடீரென்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். அவருடைய நடவடிக்கை கட்சியில் பெரிய பூகம்பத்தைக் கிளப்பியது. அதைக் கிளப்பியவர் எம்.ஜி.ஆர்.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சை ஆனதால், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அந்தச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அதிமுக ஆரம்பித்த பிற்பாடு உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள தேவிக்குத் தங்க வாள் ஒன்றைக் காணிக்கையாக வழங்கினார் என்பது தனிக்கதை.
ஆனால், கருணாநிதி தன் இறுதிக் காலம்வரை பகுத்தறிவுக் கொள்கையிலிருந்து விலகவே இல்லை. அவர் மஞ்சள் சால்வை அணிந்தபோது சிலர் அதை விமர்சித்தனர். ஆனால், அதற்கு தமிழர்களின் அடையாளம் மஞ்சள் என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி.

ஒருபோதும் அவர் மத அடையாளங்களை ஏற்றதே இல்லை. 'ராமர் பாலம்' கட்டுவது குறித்து நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை எழுந்தது. வலதுசாரி அமைப்புகள் கடுமையாக அத்திட்டத்தை எதிர்த்தனர்.
அப்போது கருணாநிதி, "ராமர் எந்தக் கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார்?" என்று அதே 'பராசக்தி' கால தைரியத்துடன் கேள்வி எழுப்பினார். அந்தப் பேச்சுக்காக வடநாட்டுச் சாமியார் ஒருவர், "கருணாநிதியின் தலையைச் சீவி விடுவேன்" என்றார்.

அப்போது அசராது "சீவட்டும், என் தலையை நானே சீவி பல ஆண்டுகள் ஆகிவிட்டன" என்று நகைச்சுவையாகப் பதில் சொன்னார்.
இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்னதாக கீ.வீரமணியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட கருணாநிதி, தனது வயதான காலத்திலும் பகுத்தறிவின் பக்கமே விலகாமல் நின்றார் என்பதற்கு சாட்சியாக இன்றும் யூடியூப்பில் உள்ளது.
"ஒரு நாள் விடியற்காலை ஐந்தரை மணி. புரோகிதருடைய மந்திரம் ஒலிக்கிறது. அப்போது இடையிடையே எனது தந்தையின் குரலும் எழுகிறது. மந்திரம் ஒலிக்கும்போது என் தந்தையின் குரல் குறுக்கிட்டு, 'என்னய்யா விளக்கேற்றவில்லையா? 'என்று கேட்கிறது. திவசம் கொடுக்கின்ற இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டுத்தான் மந்திரத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். மறையவர் அன்றைக்கு மறந்துவிட்டார் போலும்.

அவர் பரவாயில்லை, இப்போது விளக்கை ஏற்றிவிட்டால் போதும் என்று கூறிக்கொண்டே விளக்கை ஏற்றுகிறார். அப்போது அவரது வாய் குழறுகிறது. உடனே என் தந்தை, 'என்ன வாய் குழறுகிறது? வெற்றிலை பாக்கா?' என்கிறார். 'ஆமாம் ஆமாம்' என்றார் அவர்.
அதையும் குழறிக் கொண்டே சொல்கிறார். என் தந்தை, 'வாய் எல்லாம் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு மந்திரம் ஒரு கேடா? என் பையன் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. எழுந்திருய்யா. உன் திவசத்தை நான் ஏற்க மாட்டேன். உன் மந்திரத்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.
மேலும் என் தந்தை, "இன்றையோடு என் வீட்டில் திதி, திவசம் எதுவும் கிடையாது. இனி என் பயன் சொன்னபடிதான் நடக்கும்" என்கிறார்
அந்த ஐயருடைய பெயர், ராதாகிருஷ்ணன் ஐயர். அவருடைய மகன் குரு சுப்பிரமணியன் சென்னை வானொலி நிலையத்திலே ஒரு காலத்தில் வேலை பார்த்தார்.

திருவாரூரிலே 'ஓங்காரம்' என்று ஒரு சடங்கு நடைபெறும். இரவு 12 மணி நடுநிசியில் வீதிகளில் 10 பேர் ஒன்றாகச் சேர்ந்து 'ஓம்' என்று கூச்சல் போட்டு வருவார்கள். இந்த 10 பேர் ஐந்து ஐந்தாகப் பிரிந்து கைகோத்தபடி நடப்பார்கள். அப்போது ஒருவர் 'ஓம்' என்று சொல்வார். அவருக்கு மூச்சு விடச் சிரமம் வரும்போது அவர் அடுத்தவர் கையைக் கிள்ளுவார். உடனே அடுத்தவர் 'ஓம்' என்று ஒலி எழுப்புவார். இப்படி இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி வருடத்தில் 3 நாள்கள் திருவாரூரில் உள்ள 4 வீதிகளிலே இரவு 12 மணிக்கு இந்த 'ஓங்காரம்' சடங்கு நடைபெறும். இந்த 'ஓங்காரத்தின்'போது யாரும் குறுக்கிடக்கூடாது. குறுக்கிட்டுத் தடுத்தாலோ அல்லது குறுக்கே சென்றாலோ ரத்தம் கக்கிச் செத்துவிடுவார்கள் என்பது ஐதீகம். ஒரு பயமுறுத்தல். ஒரு எச்சரிக்கை. ஒரு மூடநம்பிக்கை.
இதை எதிர்த்து எங்களை இயக்கத்தில் வளர்த்துவிட்ட ராமன், தங்கராஜ், முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் ஒரு நாள் 'ஓங்காரம்' பாடி வரும்போது நாங்கள் குறுக்கே மறிக்கப்போகிறோம் என்று கூறி எங்களுக்கு ஆதரவு தாரீர் என்று துண்டறிக்கை வெளியிட்டார்கள்.
'ஓங்காரம்' வழக்கம்போல் 12 மணிக்குப் புறப்பட்டது. இவர்கள் குறுக்கே நின்று மறுத்தார்கள். வந்த 'ஓங்காரம்' சற்று நேரம் தங்களின் ஆங்காரத்தைக் காட்டிவிட்டு வந்த வேகத்திலேயே கலைந்து ஓடிவிட்டது. அதற்குப் பின் திருவாரூரில் ஓங்காரமே கிடையாது" என்று பேசி இருந்தார்.
இப்படி, தன் இறுதிக்காலம்வரை பகுத்தறிவுக் கொள்கையை விடாமல் அவர் இறுகப் பற்றி இருந்தார்.












Click it and Unblock the Notifications