கதம் கதம்..கொளத்தூரில் பாபு வென்றது வென்றதுதான்! டாட் வைத்த தேர்தல் ஆணையம்! திமுகவின் அடுத்த ஸ்டெப்?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி எஸ் பாபு. திமுக தலைவர் முக ஸ்டாலினை சுமார் 8700 வாக்குகள் வித்தியாசத்தில் தோக்கடித்து இருந்தார். இந்நிலையில், அங்குள்ள 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என திமுக குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் எந்த முரண்பாடும் இல்லை எனவும், அனைத்தும் சரியாக இருந்ததாக சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் விளக்கம் அளித்திருக்கிறார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக விஎஸ் பாபு களம் இறங்கினார்.

அவர் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் விஎஸ் பாபுவிடம் தோல்வியடைந்தார்.
கொளத்தூர் தொகுதி
இந்த நிலையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டிருந்தார். அதன்படி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.
திமுக புகார்
மொத்தம் 8 நாட்கள் இந்த பணியானது நடைபெற்றது. இதில் திமுக, தமிழக வெற்றிக்கழகம், சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல்கள் சரியாக இல்லை எனவும், சில இயந்திரங்களில் புதிதாக டேக் ஒட்டப்பட்டு இருந்ததாக திமுக குற்றம் சாட்டியது. மேலும் ஐந்து இயந்திரங்களில் பிரச்சினை இருப்பதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக திமுக வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ கூறியிருந்தார்.
விஎஸ் பாபு
அதே நேரத்தில் வாக்கு இயந்திரங்களில், எந்த பிரச்சனையும் இல்லை என கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு கூறியிருந்தார். இந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி முழுமையாக நிறைவடைந்ததாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியமான சமீரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியும் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில்," கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் கமிஷன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் இருந்து ஒரு என்ஜினீயர் மற்றும் 2 உதவி என்ஜினீயர்களை நியமித்தது.
வாக்குப்பதிவு இயந்திரம்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ஜினீயர்கள் விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் விண்ணப்பதாரரால் தேர்வு செய்யப்பட்ட 14 வாக்குச்சாவடிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டனர்.
முரண்பாடு இல்லை
பின்னர் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் வி.வி.பேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. விண்ணப்பித்த வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன." என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
