கொளத்தூரில் குளறுபடி.. ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை! களத்தில் இறங்கியது தேர்தல் ஆணையம்!
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை தொடர்ந்து, இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு நடைபெற உள்ளன.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருந்தார். இருப்பினும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதை தொடர்ந்துதான் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கு பின்னர் வேட்பாளர்கள் இப்படியான கோரிக்கைகளை வைப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று இயந்திரங்களை இன்று முதல் சரி பார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 9 மணிக்கு.. திமுக முகவர்களின் முன்னிலையில் இந்த இயந்திரங்களின் சீல் பிரிக்கப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் என 14 தொகுதிகளின் இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் தொகுதிகளிலும் இதே போன்று புகார்கள் வந்திருக்கின்றன. எனவே, இந்த தொகுதிகளிலும் மின்னணு இயந்திரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
