Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க சும்மா இருங்க.. கடுமையாக எதிரொலித்த ‘மாஜி’ பேச்சு.. சீண்டிய முனுசாமி.. விடாப்பிடி சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பு நேற்று நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது கேபி முனுசாமி மறைமுகமாகப் பேசிய விஷயமும், சி.வி.சண்முகத்தின் பேச்சும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக உடனான கூட்டணி தொடர்பாக சிவி சண்முகம் பேசியது சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரைச் சீண்டும் விதமாக நேற்றைய கூட்டத்தில் முனுசாமி பேசியுள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் ஆகியோருக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவருக்கும் இடையேயான ஈகோ யுத்தம் ஈபிஎஸ் தரப்புக்கு சிக்கலாகவே உள்ளது.

ஜூன் மாதம் நடந்த பொதுக்குழு மேடையிலும் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் சில விவகாரங்கள் பற்றியும் இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றைய கூட்டத்திலும் முனுசாமி - சண்முகம் சீண்டல்கள் தொடர்ந்துள்ளன.

ஓபிஎஸ் அணி கூட்டம்

ஓபிஎஸ் அணி கூட்டம்

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். அதிமுகவின் அரசியல் ஆலோசகரான மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழிகாட்டுதலில், இந்தக் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

எடப்பாடி ஆலோசனை

எடப்பாடி ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் நகர்வுகள், பாஜக உடனான கூட்டணி பற்றியும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும், அதிமுக தலைமையில் கூட்டணி இருக்க வேண்டும், ஓபிஎஸ் தரப்பினரை ஒருபோதும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றும் பேசி உள்ளனர்.

பாஜக கூட்டணி?

பாஜக கூட்டணி?

மேலும் இந்தக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி பற்றி நிர்வாகிகள், பொதுவெளிகளில் பேசி வருவது பற்றி பேசப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறது எனப் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகத்திடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்பட்டது.

 ஈபிஎஸ் - சிவிஎஸ் முட்டல்

ஈபிஎஸ் - சிவிஎஸ் முட்டல்

இதற்கிடையே, கடந்த 24ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளன்று எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டுச் சென்ற பிறகு தனியாக சிலருடன் வந்து அஞ்சலி செலுத்தினார் சி.வி.சண்முகம். கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாகவே முன்கூட்டியே வரமுடியவில்லை என விளக்கம் அளித்தார் சிவி சண்முகம். ஆனால், பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் ஈபிஎஸ் - சிவிஎஸ் இடையே முட்டல் ஏற்பட்டுவிட்டது என்கிற ரீதியில் தகவல்கள் பரவின. இந்நிலையில், பாஜக கூட்டணி தொடர்பான சிவி சண்முகத்தின் பேச்சு நேற்றைய கூட்டத்தில் முக்கியமான விவாதப் பொருளாகியுள்ளது.

சீண்டிய முனுசாமி

சீண்டிய முனுசாமி

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துகளை இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பேசலாம். பொது இடங்களில் கூட்டணி பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியமில்லை, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றியெல்லாம் தலைமைக் கழகம் பார்த்துக்கொள்ளும் எனப் பேசியுள்ளார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் பாஜக கூட்டணி பற்றிப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டே இவ்வாறு பேசியுள்ளார் கேபி முனுசாமி. இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்துள்ளது.

ஆதரவாக பேசிய வேலுமணி

ஆதரவாக பேசிய வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசுகையில் நமது ஒற்றுமையில் பிளவு வராதா என கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் நினைவு நாளன்று சி.வி.சண்முகம், டிராஃபிக் ஜாம் காரணமாக தாமதமாக வந்தார். அதை எங்களிடம் அப்போதே தெரிவித்துவிட்டார். பின்னர் நாம் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற பிறகுதான் அவர் வந்து சேர்ந்தார். அதற்குள் அவர் தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார், எடப்பாடி பழனிசாமியுடன் பிரச்சனை எனக் கிளப்பிவிட்டு விட்டார்கள் எனப் பேசியதாக கூறப்படுகிறது.

சண்முகம் பேச்சால் சலசலப்பு

சண்முகம் பேச்சால் சலசலப்பு

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் பேசியபோது, பாஜக நம் கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் ஓட்டு கொஞ்சம் கூட கிடைக்காது. தயவுசெய்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பேசியுள்ளார். மேலும், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் அணிகளில் இருக்கும் நமது முன்னாள் நிர்வாகிகளை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் சிவி சண்முகம் பேசியுள்ளார். சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து சில நிர்வாகிகள், ஓபிஎஸ் அணியினரை இனி நம் அணிக்குள் சேர்க்கவே கூடாது எனப் பேசியுள்ளனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் எடுக்கும் முடிவு தான்

நாம் எடுக்கும் முடிவு தான்

கடைசியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, வழக்குகள், கூட்டணி பற்றி எல்லாம் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபடுங்கள். அதிமுக விவகாரத்தில் பாஜக எந்த வகையிலும் தலையிடவில்லை. கூட்டணி பற்றியெல்லாம் நாம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. எது கட்சியின் நன்மைக்கு சரியோ அதைச் செய்வோம். யாரைப் பற்றியும் தரக்குறையாக விமர்சிக்கக்கூடாது. கூட்டணி பற்றி பொது வெளிகளில் யாரும் பேச வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிமுக - பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+