இனி மக்களுக்காக உழைப்போம்.. தவெக கொடியில் என்ன இருக்கு? சஸ்பென்ஸ் வைத்து பேசிய நடிகர் விஜய்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடி மற்றும் பாடல் இன்று வெளியிடப்பட்டது. கட்சிக் கொடியை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜய் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி பாடலையும் நடிகர் விஜய் வெளியிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் முன்பு உரையாற்றிய விஜய், இனி மக்களுக்காக உழைப்போம், கட்சிக் கொடி அல்ல, வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடி. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என பேசினார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்று விஜய் கூறியிருந்தார். அதற்கான பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பாக கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய விஜய் முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைத்தார்.
இன்று காலை 9.15 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கட்சி கொடியில் இரண்டு யானைகள், வாகை மலர், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் கொடி உள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில், "தமிழன் கொடி பறக்குது" தலைவன் யுகம் பிறக்குது.. என்று இந்த பாடல் உள்ளது.
இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்பாக கட்சிக் கொடி ஏற்றுவதை பெருமையாக நினைக்கிறேன். கட்சிக்கொடியை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக உள்ளது.
சந்தோஷமாக, கெத்தாக நம்முடைய கொடியை ஏற்றி கொண்டாடுவோம். முறையான அனுமதி பெற்று தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம், இனி மக்களுக்காக உழைப்போம். தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் இனி உழைப்போம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.. தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் உள்ளவற்றை இனி நடக்கும் மாநாட்டில் தெளிவாக சொல்லுகிறேன். இவ்வாறு விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications