அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? போதையில் இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய நண்பர்!
வேலூர்: உற்சாக பானத்தின் போதை தலைக்கேறியதில்.. கூட உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த நண்பரின் உதட்டை இளைஞர் ஒருவர் கடித்து துப்பியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், மலைக்கு அடியில் வழக்கம் போல நண்பர்கள் 3 பேர் கூடியிருக்கிறார்கள். அகரம் கௌரன் பகுதியை சேர்ந்த முரளி உற்சாக பானத்தை வாங்கிக்கொண்டு, நண்பர்களான பிரேம்குமார், அன்பழகன் ஆகியோரை போன் போட்டு கூப்பிட்டிருக்கிறார்.
வழக்கமான இடத்தில் அட்டி போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் ரவுண்டில் அனல் பறக்க அரசியல் கதைகள் பேசப்பட்டிருக்கின்றன. என்ன இருந்தாலும் டிரம்ப் இப்படி செய்திருக்க கூடாது.. அவர் தோற்றதற்கு காரணமே இதுதான் என்று விவரங்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது ரவுண்டில் பாசம் பருவமழை போல கொட்டி தீர்த்திருக்கிறது. ரவுண்டு 3க்கு வரவும் மீண்டும் விவாதம் சூடுபிடித்திருக்கிறது. இந்த முறை அமெரிக்க அரசியலை தவிர்த்துவிட்டு.. லோக்கல் பாலிடிக்ஸில் இறங்கியிருக்கிறார்கள். மத்திய புள்ளியியல் துறையே அசந்து போகும் அளவுக்கு.. முரளியும், பிரேம்குமாரும் பேரும் விவரங்களை அடுக்கி தள்ளியிருக்கிறார்கள்.
மினி சட்டசபையே நடந்திருக்கிறது. பிரேம்குமார் தனது ஆஸ்தான கட்சிக்கு ஆதரவாக பேச.. அதெல்லாம் ஒரு கட்சியா? என முரளி வாயைவிட.. பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது. நடுவராக இருந்து அன்பழகன் சமாதானம் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில்.. உற்சாக பானத்தில் உற்சாகம் இழந்ததை உணர்ந்த அவர்கள், ஒன் டூ ஒன் சண்டையை தொடங்கியிருக்கிறார்கள். சும்மா வெறும் வாயில்தான். அவனே, இவனே என்று மாறி மாறி பேசியிருக்கிறார்கள். பின்னர் குடும்ப பெருமைகளையும், அதை ஏற்படுத்திய உறுப்பினர்களையும் கூட பேச்சுக்குள் இழுத்திருக்கிறார்கள்.
களம் 8 சூடாகிக்கொண்டே வருகிறது. இப்போது தேவையெல்லாம்.. கை கலப்புக்கான ஒரே ஒரு புள்ளிதான். முரளி அதை தாராளமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார். உட்சபட்சமாக முரளி ஏதோ சொல்ல.. அன்பு மிகுதியில் உதட்டை பிடித்து கடித்திருக்கிறார் பிரேம்குமார். இந்த முறை அன்பழகனின் நடுவர் பணி எடுபடவில்லை.
கடித்ததில், உதடு உரிந்துக்கொண்டு கையோடு வந்திருக்கிறது. முரளி அலற.. உற்சாக மோடிலிருந்து, யதார்த்தத்திற்கு அப்போதுதான் வந்திருக்கிறார் பிரேம்குமார். நடந்தது எவ்வளவு பெரிய சம்பவம் என்பது விளங்கியிருக்கிறது. உடனே.. துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடியிருக்கிறார். அன்பழகனும் எஸ்கேப். பின்னர் ஒரு வழியாக முரளி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
உற்சாக பானத்தின் போதையில்.. உதட்டை கடித்த பிரேம்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
