தமிழகம், கேரளாவில் பாஜக என்ட்ரி! 5 தென்மாநிலங்களில் வெல்வது யார்? லோக்சபா தேர்தல் Times now சர்வே
சென்னை: வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி ரீசர்ஜ் சர்வே (Times Now - ETG Research Survey)சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் களநிலவரம் என்ன? எந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும்? என்பது தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வருமாறு:
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாத நிலையில் வரும் தேர்தலில் பாஜக அக்கவுண்ட்டை திறக்கும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி ரீசர்ஜ் சர்வே இந்தியா முழுவதும் 2 லட்சத்து 71 ஆயிரத்த 292 பேரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 சதவீதம் பேரிடம் நேரடியாகவும், 15 சதவீதம் பேரிடம் தொலைபேசி மூலமாகவும் கருத்துகள் கேட்கப்பட்டது. ஒரு மாதம் வரை கருத்து கணிப்பு பணிகள் நடந்த நிலையில் நேற்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தென்னிந்திய மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் களநிலவரம் என்ன? வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சி வெல்லும்? என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்..அந்த 3 தொகுதிகளில் பாஜகதான்.. "விஐபி" தோல்விமுகம்? India TV சர்வே
கேரளா: கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் 8 முதல் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முதல் 8 தொகுதிகளிலும், ஐயூஎம்எல் கட்சி 1 முதல் 2 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1 முதல் 2 இடங்களிலும் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் காங்கிரஸ் தனித்து களம் காணும் நிலையில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இதில் பாஜக 21 முதல் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 4 முதல் 6 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 1 முதல் 2 தொகுதிகளிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணி அதிகபட்சமாக 25 இடங்களில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா: தெலுங்கானாவில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் 8 முதல் 10 இடங்களிலும், எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 1 முதல் 3 தொகுதிகளிலும், பாஜக 4 முதல் 6 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 0-2 தொகுதிகளிலும் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது.
இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 21 முதல் 22 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கூட்டணி 3 முதல் 4 தொகுதிகளிலும் வெல்லாமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கூட்டணியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை எனவும், தெலுங்குதேசம் , ஜனசேனா கட்சிகளின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆந்திராவில் வெற்றி வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தேர்தலில் திமுக 21 முதல் 22 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 முதல் 7 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 2 - 6 இடங்களிலும், அதிமுக 1 முதல் 3 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மற்றவர்கள் 4 முதல் 5 தொகுதிகள் வரை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றவர்கள் என்பது திமுககூட்டணியில் உள்ள 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாஜக கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை குறிக்கும்.












Click it and Unblock the Notifications