சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
சென்னை: லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து கொண்டே பாஜகவில் தொடர்ந்து இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருப்பது பரபர விவாதங்களை கிளப்பி உள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் எப்படியும் கிடைத்துவிடும் என்பது நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடகா மாநில லெட்டர் பேடு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது.

இதனால் நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டங்களை மேற்கொண்டது. இருந்த போதும் இப்போராட்டங்கள் எந்த பயனும் தரவில்லை. இதனால் ஒருவழியாக மைக் எனப்படும் ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை அறிவித்தார். மேலும் இன்று முதல் சீமான் தமிழ்நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.
சீமான் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்ததாக அறிவிப்பு வெளியான உடன் இயக்குநரும் நடிகருமான சேரன் முதல் ஆதரவைத் தெரிவித்து தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அதில், "இனிமேல் இந்தியாவில் எவரும் சீமானின் இந்த சின்னம் இல்லாமல் ஓட்டுக்கேட்டு போகமுடியாது... எல்லா கட்சி மேடைகளிலும் நாம் தமிழர் சின்னம் இருக்கும்.. எல்லா 'மைக்' கின் மூலமும் முழங்குவோம்.. ஊ"மைக்"கூட்டத்தின் விழிப்புணர்வுக்கு தோழ"மைக்"கூட்டம் எதுவென்று.." என பதிவிட்டிருந்தார் இயக்குநர் சேரன்.
இதனைத் தொடர்ந்து தற்போது சிரிப்பு நடிகரும் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை கடுமையாக விமர்சிப்பவருமான எஸ்.வி.சேகர், சீமானின் மைக் சின்னத்தை தமது படத்துடன் இணைத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை எஸ்வி சேகர் ஆதரிக்கிறாரா? என நெட்டிசன்கள் தொடர்ந்து எஸ்வி சேகரிடம் அவரது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் எஸ்வி சேகர் இதற்கு விரிவான பதில் எதுவும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications