செங்கல்பட்டில் பள்ளத்தில் கவிழ்ந்த "சரக்கு" லாரி! பீர் பாட்டில்களை அள்ளிய மது பிரியர்கள்.. ஒரே குஷி!
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வெளியே விழுந்த பீர் பாட்டில்களை மது பிரியர்கள் மூட்டை மூட்டையாக அள்ளி சென்றனர்.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்குவதை காண முடியும். திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் சரக்கு லாரிகள், பேருந்துகள், கார்கள் என 24 மணி நேரமும் இந்த சாலை பரபரப்பாக இருப்பதை காண முடியும். இந்த நிலையில், தான், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பீர் பாட்டில்களோடு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற லாரி கவிழ்ந்ததில் லாரியில் கொண்டு வரப்பட்ட பீர் பாட்டில்கள் அப்படியே சரிந்து வெளியே விழுந்தன. பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி விபத்துக்குள்ளானதும் பீர் கேஸ்கள் விழுந்து சிதறிக்கிடக்கும் தகவலும் அப்பகுதியில் வேகமாக பரவியது.
இதையறிந்து வந்த மதுப்பிரியர்கள், பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். ஒவ்வொருத்தரும் 2, 3 பாட்டில்களை எடுத்துக்கொண்டு சென்றனர். ஒரு சில மது பிரியர்களோ நடக்க முடியாத அளவுக்கு பாட்டில்களை கை கால்களில் இடுக்கி கொண்டு சென்றனர். இன்னும் சில மதுபிரியர்களோ புல் போதையில் வந்தும் மது பாட்டில்களை மூட்டை மூட்டையாக அள்ளி சென்றனர்.
சிலர், அங்கிருந்த வயல்களிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விட்டு பிறகு எடுத்து செல்லலாம் என்ற திட்டத்துடன் பதுக்க ஆரம்பித்தனர். மது பாட்டிலை அள்ளிச்சென்றதும் இன்றி ஏகத்திற்கும் கையில் பாட்டிலுடன் போஸ் கொடுக்கவும் செய்து அலப்பறை செய்தனர். இதற்கிடையே, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் மதுப்பிரியர்கள் வயல்களில் பதுக்கி வைத்து இருந்த பீர் பாட்டில்களை ஊழியர்கள், சல்லடை போட்டு தேடாத குறையாய் தேடி பதுக்கி வைகப்பட்டு இருந்த பாட்டில்களை எடுத்து சென்றனர். பீர் பாட்டில்களை மது பிரியர்கள் அள்ளி சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications