நிலத்தோட மதிப்பு ரூ.50 கோடி.. காசுக்கு ஆசைப்பட்டு வித்துடாதீங்க! நரிக்குறவர்களுக்கு மா சு அட்வைஸ்
சென்னை: ரூ.50 கோடி பெறுமானமுள்ள இந்த இடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார். எனவே யாரும் பணத்திற்கு ஆசைப்பட்டு இடத்தை விற்றுவிடக்கூடாது என மா சுப்பிரமணியன் நரிக்குறவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக கிண்டி வட்டம் கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை பகுதிகளில் நடந்த விழாவில்158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பேருக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கினார்.

இலவச வீட்டுமனைப் பட்டா
சென்னை சைதாப்பேட்டை ஜிப்ஸ் காலனியில் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.
கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் நீண்ட காலமாக பட்டா வழங்கக் கோரி கோரிக்கை வைத்து வந்தனர். நகரின் மையப் பகுதியில் இருக்கும் இந்த இடத்தை இலவசமாக பட்டா கொடுப்பதில் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்தது.
காசுக்கு ஆசைப்பட்டு விற்று விடாதீர்கள்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அனைவருக்கும் இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்து வந்தார். இந்த நிலையில் இங்குள்ள 158 குடும்பங்கள் உள்பட மொத்தம் 299 பயனாளிகளுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று இலவச பட்டாக்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "நிலத்தோட மதிப்பு சுமார் 50 கோடி. எனவே காசுக்கு ஆசைப்பட்டு நிலத்தை யாரிடமும் விற்று விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார்.
மா சுப்பிரமணியன் பேசியதாவது:- மக்கள் நலன் ஒன்றை அடிப்படையாக கொண்டு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினர் சமூக மக்களான நரிக்குறவர்கள் நலனுக்காக குடியிருப்பு வசதி, வீட்டுமனை பட்டா போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ரூ.50 கோடி மதிப்பு
நரிக்குறவர்கள் என்று அழைத்தால் கண்ணியக் குறைவாக இருக்கும் என்று உங்களை நெறிக்குறவர்கள் என்று அழைத்தார் கலைஞர். இப்போது அரசு வழிகாட்டு மதிப்புப் படி ரூ.18 கோடியும், சந்தை மதிப்பில் ரூ.50 கோடியும் பெறுமானமுள்ள இந்த இடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார்.
இந்த இடமானது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடம். முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு, 18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இடமானது உங்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசை வார்த்தைகள் கூறுவார்கள்
இனி நீங்கள் குடியிருக்கும் இந்த இடம் உங்களுக்கு சொந்தமாகிவிட்டது. இனிமேல் இந்த இடத்தை சிறப்பாக பராமரிப்பது உங்கள் கடமை, உங்கள் பொறுப்பு.. ரொம்ப முக்கியமாக விலை மதிப்பு அதிகம் உள்ள இந்த இடத்தை வாங்குவதற்கு பலரும் உங்களிடம் ஆசை வார்த்தையினை கூறுவார்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு நீங்களும் இந்த இடத்தை விற்றுவிடக்கூடாது. இந்த இடத்திலேயே நீங்கள் வாழையடி வாழையாக வாழ வேண்டும். வளர வேண்டும். இதேபோல் உங்களுக்கு வீடு கட்டுவது உள்பட எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள். அரசிடம் கேளுங்கள். அனைத்தையும் செய்து கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. என்று உருக்கமாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "தற்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலமாக, நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர வாழ்விடத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்யும்" என்றார்.












Click it and Unblock the Notifications