விவாகரத்து வழக்கு நடக்கும் போதே இடைக்கால ஜீவனாம்சம் தரலாம்.. நீதிமன்றங்களுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள தம்பதியரின் குழந்தைகளின் நலனை கருதி, மனு தாக்கல் செய்யாதபட்சத்திலும் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி ஒருவர், விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு நிலுவையில் உள்ள நிலையில், மனைவி தனது குழந்தையுடன் ஓசூரில் உள்ள பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கென்று வருமானம் ஏதும் இல்லாததால் ஓசூரில் இருந்து சேலம் வந்து செல்வது சிரமமாக இருப்பதாகவும், எனவே தனது விவாகரத்து வழக்கை ஓசூருக்கு மாற்றக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி, வழக்கை ஓசூருக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜீவனாம்சம் கோரிய பல மனுக்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தம்பதியர் இடையிலான பிரச்னை காரணமாக குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
விவாகரத்து கோரும் ஒரு பெண், குழந்தையுடன் வேலையில்லாமல் இருந்தால், அவரது அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், தாமாகவே முன் வந்து இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி அவரது கணவருக்கு உத்தரவிடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கத் தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications