ஆசிரியர்கள் நியமனத்தின் போது இனி இதுவும் நடக்கும்... அரசுக்கு உயர்நீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்வி
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையே போட்டித்தேர்வு நடத்தி அதன் மூலம் மட்டுமே தற்போது ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படி தேர்வு செய்யப்படும் ஆசியர்களின் குற்றப்பின்னணி பற்றி பணி நியமனத்தின்போது போலீசார் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு அளித்த பதிலை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை கடந்த 2012ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையே போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்மூலம் மட்டுமே ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று அறிவுறுத்தினார்.
இதனிடையே உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறும் போது, அண்மைகாலமாக குற்ற வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் குறித்து பல செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன. அதனால், ஆசிரியர்கள் நியமனத்தின்போது அவர்களது குற்றப்பின்னணி குறித்து போலீஸ் மூலம் ஏன் விசாரிக்கக்கூடாது? போலீஸ் வேலைக்கு சேர்பவர்கள், வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்பவர்களின் குற்றப் பின்னணி குறித்து போலீசார் மூலம் விசாரிக்கிறார்கள்.. இப்படியான சூழலில் ஆசிரியர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவு எடுக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யும் போது, அதில் குற்ற வழக்கு குறித்து குறிப்பிட வேண்டும். அந்த வழக்கு ஆவணத்தையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்று விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்குகளுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications