அதிமுக விவகாரம்- தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்- சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு- இபிஎஸ் மனு டிஸ்மிஸ்
சென்னை: அண்ணா திமுக உட்கட்சி விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒருமனுத் தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க கோரியிருந்தார் சூரியமூர்த்தி. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணைய விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மனு
இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
எடப்பாடி தரப்பில் கடும் எதிர்ப்பு-ஏன்?
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வது என அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. இத்தகைய அதிகாரம் உரிமையியல் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் நீடித்த ஆதரவு அப்படியே உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு பேரிழப்பு ஏற்படும். ஆகையால் அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
நீதிமன்ற உத்தரவால்தான் விசாரணை
ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தேர்தல் ஆணையமானது அதிமுக வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் விசாரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி அனுப்பி வைத்தது என்றார்.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு- தேர்தல் ஆணையம் வாதம்
மேலும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். அதிமுகவில் நிலைமை மாறி உள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு பெரும்பாலானோர் ஆதரவாக உள்ளனர். ஆகையால் தேர்தல் ஆணையம் இதனை விசாரிக்க அதிகாரம் கொண்டதாகும். ஆகையால் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது எனவும் வாதிட்டார்.
எடப்பாடி மனு டிஸ்மிஸ்- தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12-ந் தேதி (இன்று) ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அக்கட்சியின் விவகாரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எடப்பாடிக்கு பின்னடைவு
அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவு என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications