"உங்க உயிர் ரொம்ப முக்கியம் மக்களே..." முதல்வர் ஸ்டாலின் வைக்கும் முக்கியமான கோரிக்கை!
சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் தான் சமூக பண்பாடு தனிமனித ஒழுக்கம் இருக்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்றும் கூறிய முதல்வர், தனிநபரின் உயிர் நாட்டுக்கு மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 - 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை மேல்மருவத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே 'இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செய்லபடுத்தப்பட்டுள்ளது.

உடனடி உதவி
விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முதலிடம்
நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சாலை விபத்துகளை பொறுத்தவரை இந்திய அளவில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது வருத்தத்தை தருகிறது.

தமிழகம் சிறப்பு
நாட்டுக்கே பெரும் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள முதல்வர்களில் நான் முதலிடம் என்பதைவிட தமிழகம்தான் மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

உயிர் முக்கியம்
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வர வேண்டும் என்பது எனக்கும் உங்களுக்கும் அதிகமாக ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் தான் சமூக பண்பாடு தனிமனித ஒழுக்கம் இருக்கிறது. தனிநபரின் உயிர் நாட்டுக்கு மிக முக்கியம். சாலை பாதுகாப்பை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

வேகம் வேண்டாம்
உடனடியாக உதவ கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'இன்னுயிர் காப்போம்'. நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. சாலை விபத்துக்களில் பெரும்பாலும் இளம் வயதினர் உயிரிழக்கின்றனர். சாலைகளில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய மு.க. ஸ்டாலின் விபத்தில்லா தமிழகத்தை நிச்சயம் அமைப்போம் என்று கூறினார்.

ஹெல்மெட், சீட் பெல்ட்
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சாலை விபத்துக்களில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கம் என்று கூறிய முதல்வர், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலவச சிகிச்சை
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு 48 மணிநேரம், அடையாள அட்டைகள், காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் என எந்த ஆவணங்களையும் கேட்காமல் முதல்கட்ட சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தத் திட்டம் 205 மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 405 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 610 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications