தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் காலமானார்! இறுதி சடங்கிற்கு பணமில்லாமல் குடும்பம் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைமலையடிகளின் மகன் மறை.பச்சையப்பன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 78. அவரது இறுதி சடங்கு நடத்த அரசு உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலையடிகள் 1876 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர் என சொல்லலாம். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இவரது இயற்பெயர் வேதாசலம், நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பாடியில் பிறந்தார். இவர் தமிழ் மீது கொண்ட பற்றாலும் தூய தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற நோக்கத்திலும் தனது வேதாசலம் என்ற வடமொழி பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார்.

தமிழில் பிற மொழி சொற்களின் ஆதிக்கத்தை குறைத்து தூய தமிழை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 1912 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கினார். தனது மகள் நீலாம்பிகையுடன் இணைந்து தூய தமிழில் பேசும் வழக்கத்தை கொண்டு வந்தார்.

இவர் நடத்திய ஞானசாகரம் என்ற இதழின் பெயரை அறிவுக்கடல் என மாற்றினார். தமிழ் ஆராய்ச்சி மற்றும் சமரச சன்மார்க்க கருத்துகளை பரப்புவதற்காக இந்த நாளிதழை நடத்தியவர்.

வள்ளலாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் சமரச சன்மார்க்க சபையை உருவாக்கினார். இவர் தமிழர் மதம், சாகுந்தல நாடகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். 1937 ஆம் ஆண்டு இந்தி மொழி திணிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார். அது போல் சாதி ஆதிக்கத்திற்கும் சடங்குகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர்.

maraimalai adigal son

இப்படிப்பட்ட பெருமைக்குரிய இவருக்கு மறை. பச்சையப்பன் என்ற மகன் இருந்தார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது மகள் லலிதா, மகன் சிவக்குமார் ஆகியோர் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கெனவே அவருடைய சிகிச்சைக்காக அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே அவரது இறுதி சடங்குக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மறை பச்சையப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மகள் செய்தி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் மறைமலையடிகளின் பேத்தி. எங்களுக்கு அரசு சார்பில் குடியிருப்பு கொடுக்கப்பட்டது.

மூன்றாவது மாடி என்பதால் என் தந்தையால் ஏறி இறங்க முடியாமல் அவதிப்பட்டார். கீழ் தளத்தில் வீடு மாற்றி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் தற்போது மாடி ஏறி இறங்கும் போது கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது.

அம்மா இறந்து ஓராண்டுதான் ஆகிறது. அப்பாவுக்கு இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் 3ஆவது மாடிக்கு ஏறி இறங்க முடியாது. அதனால் அவருக்கு வீட்டை கீழே கொடுத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மறை பச்சையப்பன் காலமானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+