பாஜகவுக்கு ‘ஸ்கெட்ச்’.. இதை மீறி என்ன செய்ய முடியும்? தேர்தலில் சிக்கலாச்சே.. பிளான் போட்ட மதிமுக!
சென்னை : இந்தி பேசாத மாநிலங்கள், தங்கள் தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதனை மத்திய பாஜக அரசு ஏற்காவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில், அந்தந்த மாநில மக்கள் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் மதிமுக மாநில அவைத்தலைவர் துரைசாமி கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கே முக்கியத்துவம் தருவதாகவும், அந்த மொழிகளை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
அவ்வப்போது, மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிகள் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் இந்தி திணிப்பு முயற்சிகள் எதிர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தி மொழி பேசாத 11 மாநிலங்களிலும், அந்த மாநிலங்களின் தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்தி திணிப்பு
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக மாநில அவைத்தலைவர் சு.துரைசாமி, "மத்திய பாஜக அரசு இந்தியைத் திணிக்க இன்று பெருமுயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலம் என்பது வெள்ளைக்காரர்களின் மொழி என மக்களால், சுதந்திர கால கட்டத்தில் கருதப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்ப்பதால், இயல்பாகவே அவர்களது மொழியையும் எதிர்த்தனர். தமிழகத்துக்கு வந்த அமித்ஷா, தமிழ் மீது பெரிய பற்றும், பாசமும் இருப்பதாக பாசாங்கு காட்டும் வேளையில், தமிழக அரசும் தாய்மொழியில் மருத்துவத்தையும், பொறியியல் துறை கல்விகளை கொண்டுவர வேண்டும் என்கிறார்.

அந்த இடத்திற்கு இந்தி
ஆனால் அவரின் உள்நோக்கம், தமிழில் மருத்துவமும், பொறியியலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்று தொழில் செய்ய முடியாது. ஆனால் இந்தி படித்திருக்கக் கூடியவர்கள், இந்தி மட்டும் படித்தவர்கள் உலக நாடுகளுக்கு செல்ல முடியாது. ஆங்கிலம் என்பது என்பது இன்றைக்கு உலக மொழி. ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு, முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது குறைவு. ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்துக்கு இந்தியைக் கொண்டுவருவோம் என்று சொல்லும் மத்திய அரசு, குஜராத்திலும், பீகாரிலும், மத்திய பிரதேசத்திலும் ஆங்கிலத்தை எதற்காக கட்டாய பாடமாக வைத்துள்ளனர்?

ஐடியா
மோடி, அமித்ஷாவின் கூற்றுப்படி, குஜராத்தில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு குஜராத்தி, இந்தி மொழி, சமஸ்கிருத மொழியை சொல்லித் தரலாமே.. ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு, காஷ்மீர் உட்பட 11 மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் உள்ளன. இந்த சட்டப்பேரவைகளில் தங்கள் தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால், அதை எதிர்க்க அந்தந்த மாநிலங்களில் உள்ள பாஜகவால் முடியாது.

புறக்கணிப்பார்கள்
ஒருவேளை எதிர்த்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மாநில மக்கள் புறக்கணிப்பார்கள். நாட்டில் பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்தி பேசுகின்றன. 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பிரிவு பள்ளிகளிலும், அந்தந்த மாநில மொழிகள் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் இந்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழியாக, தமிழை சேர்க்க வேண்டும் என தீர்மானம் போட்டு, மத்திய அரசாங்கத்துக்கு நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில்
மாநில மொழிகளின் மொழி உணர்வுக்கு எதிராகச் செயல்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் தோல்வியை சந்திக்க நேரிடும். வரும் 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான முன்னெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். மதிமுகவின் இந்த யோசனையை தமிழக முதல்வர் முன்னெடுப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

நல்ல யோசனை
பல மாநிலங்களில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத பாஜக அரசு, தேர்தலைக் கருத்தில் கொண்டு அவற்றை நிறைவேற்றியுள்ளது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்களில், தேர்தல் நெருங்குவதையொட்டி வாக்குகளைக் கவர்வதற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பாஜக. அந்த வகையில், மாநில மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தேர்தல் நேரத்தில் எழுப்பி, பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற மதிமுகவின் யோசனையை பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் அரசுகள் கையில் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications