உச்சகட்ட அப்செட்டில் இருக்கும் மதிமுக 'சீனியர்'.. திமுக ‘தலை’ பாஸ் செய்த ‘பாச’ மெசேஜ்.. ஓஹோ!
சென்னை : மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், வாரிசுத் தலைமை உடன் நிலவும் மோதல் போக்கால் கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக நோக்கி கொடியை அசைத்திருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் இத்தனை ஆண்டு காலம் பயணித்து விட்டதால் வேறு வழி இல்லாமல் அந்த சீனியர் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், வைகோவும் இதனை கண்டுகொள்ளாததால் திமுகவில் துண்டு போட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், திமுக தலைமையும், அப்படி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிடாதீர்கள், அண்ணன் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார் என சமாதானம் பேசி வருகின்றனராம்.

மதிமுகவில் வாரிசு அரசியல்
மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கு அக்கட்சிக்குள் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. துரை வைகோ கட்சிக்குள் முன்னிலைப்படுத்தப் பட்டதில் இருந்தே இந்த அதிருப்திகள் வெடித்தன. 1993ல் மதிமுக தொடங்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றே வாரிசு அரசியலை எதிர்ப்பது தான் என்பதால் நிர்வாகிகளால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனினும் வைகோவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு துரை வைகோவின் என்ட்ரியை முக்கிய நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர்.

கட்சிக்குள் குமுறல்
ஆனால், சமீபகாலமாக, துரை வைகோவின் நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சீனியர்களை மதிக்காமல் அவர் நடந்து கொள்வதாக கட்சிக்குள் குமுறல்கள் இருந்து வருகின்றன. இதனால் தான் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகவினர் சமீபத்தில் கூண்டோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆரம்ப காலம் முதலே மதிமுக வலுவாக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளின் அதிருப்தி கட்சிக்குள் பெரும் புயலை வீசியுள்ளது.

சீனியர் உரசல்
இந்நிலையில் தான் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்த கரிகாலனின் ஆளுகையில் இருந்த ஊரை அடைமொழியாகக் கொண்ட மூத்த நிர்வாகி ஒருவருக்கும், துரை வைகோவுக்கும் உரசல் அதிகரித்துள்ளதாம். பல்லாண்டுகாலமாக வைகோவுடன் தோளுக்குத் தோள் நின்று பணியாற்றி வரும் அந்த சீனியரையும் துரை வைகோ மதிக்காதது தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இனி மரியாதை இருக்காது
சமீபத்தில் நடைபெற்ற மதிமுக கூட்டம் ஒன்றிலும், துரை வைகோ அந்த சீனியரை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இதனால், கடுமையாகச் சீண்டப்பட்ட அந்த'சீனியர்' தலைவருக்காக எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியும்? நமக்கு இனி மரியாதையை இங்கு எதிர்பார்க்க முடியாது என அவர் வேதனையுடன் தனது ஆதரவாளர்களிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைவரின் பாசம்
இதையடுத்து, லேசாக திமுக தலைமையை நோக்கி கண் சிமிட்டியுள்ளார் அந்த சீனியர். மதிமுகவுக்குள் நடக்கும் விவகாரங்களை நன்கு கவனித்து வருகிறார் திமுக தலைவர். அதிருப்தியில் இருக்கும் மதிமுக சீனியர் மீது திமுக தலைவருக்கும் தனிப்பாசம் தான். ஆனால், அங்கிருந்து அவரை திமுகவில் சேர்ப்பது தர்ம சங்கடமானது என கருதுகிறாராம்.

அவசரப்பட்டுடாதீங்க
இதனால், திமுக தலைமை சார்பாக அந்த சீனியரிடம் பேசியிருக்கிறார்கள். "நிலைமை புரிகிறது, கொஞ்சம் பொறுமையா இருங்க.. வைகோ அண்ணன் உங்களை கைவிட மாட்டார், இந்த நேரத்தில் வருவது சரியாக இருக்காது, நாங்கள் பேசுகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிடாதீங்கள், வேறு எங்கும் போகவேண்டாம்னு தலைவர் சொல்லியிருக்கார்" என மெசேஜை பாஸ் செய்துள்ளனராம். இதனால், அவர் நம்பிக்கையுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications