ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.. எவற்றுக்கு தடை? எவையெவை இயங்கும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சி கடைகள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கடந்த 24-ம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பால் பூத், மருந்தகம் தவிர மளிகை, காய்கறி கடைகள் இயங்க கூட அனுமதி இல்லை. இந்த நிலையில் தொற்றை மேலும் கட்டுப்படுத்துவதற்காக வருகிற ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மளிகை பொருட்கள் விற்க அனுமதி
மளிகை பொருட்கள் மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் மட்டுமே
இதேபோல் தற்போதுள்ள முழு ஊரடங்கில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையும், நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தொடரும்.

சரக்கு வாகனங்கள் இயங்கும்
ஸ்விகி, சொமோட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் உணவக நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் செய்ய எந்த தடையும் கிடையாது. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்; ஏ.டி.எம். மற்றும் அவற்றின் சேவைகள் அனுமதிக்கப்படும். இதேபோல் சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications