கண்ணகி நகர் Bison! யார் இந்த கார்த்திகா? குடிசை பகுதியிலிருந்து மிளிரும் தங்கம்
சென்னை: பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்த கண்ணகி நகர் கார்த்திகா யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆளுயுர கட்டடங்கள் இருக்கும் இடத்தில் மறைந்திருக்கும் ஒரு பகுதி கண்ணகி நகர். இங்குள்ள மக்கள் வறுமையில் வாழும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
இங்கு 20 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறார்கள். அன்றாட கூலி வேலை செய்து உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் கண்ணகி நகர் திகழ்கிறது. சுருக்கமாக சொல்ல போனால் எந்த அடிப்படை வசதிகளுமே இல்லாமல் தொடர் போராட்டங்களை இந்த கண்ணகி நகர் சந்தித்து வருகிறது.
இங்கிருந்து ஈரான் வரை இந்தியாவுக்காக கபடி விளையாட சென்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கார்த்திகா. இவர்தான் இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டன். யார் இவர் என்பதை பார்க்கலாம்.
கண்ணகி நகரில் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் கார்த்திகா. 6 ஆண்டுகளாக கபடி விளையாடி வருகிறார். இவருக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் தங்கை காவ்யா உள்ளார். அவரும் கபடி வீராங்கனை. இவரது தந்தை ரமேஷ் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். தாய் சரண்யா, தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறாராம்.
கபடி போட்டிக்காக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைத்துவிட்டு பீகாரில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட கார்த்திகா, அந்தப் போட்டியில் வென்ற பிறகுதான் 10-ஆம் வகுப்பு மறுத்தேர்வு எழுதினார்.
சிறுவயது முதல் கார்த்திகா ஆர்வத்துடன் கபடி விளையாடினாலும் பெண் பிள்ளைகளை கபடி போட்டிக்கு அனுப்பியதால் பலர் கேலி கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்று அதே கார்த்திகா அவர் வசிக்கும் கண்ணகி நகரை தூக்கி விண்ணுயர நிறுத்திவிட்டாள்! தங்க மங்கை! நிஜ பைசன்!
அதே நகரை சேர்ந்த பயிற்சியாளர் ராஜியும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த விளையாட்டை கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications