தீபாவளி.. கோவை, திண்டுக்கல் மக்களுக்கு குஷியோ குஷி.. ரயில்வே கொடுத்த சூப்பர் நியூஸ்
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் கோவையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளுக்காக வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே குஷிதான்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்று தீபாவளி. இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி நாளை கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
பொதுவாக தொலைதூரப் பயணிகளுக்கு விரைவில் செல்லவும், குறைந்த செலவில் செல்லவும் பொதுமக்களின் முதல் தேர்வு ரயில் போக்குவரத்தாகத்தான் இருக்கும். குழந்தைகள், குடும்பத்துடன் செல்ல பாதுகாப்பானதாகவும், அடிப்படை வசதிகள் கொண்டதாகவும் ரயில் உள்ளதால் பலரும் தொலைதூரப் பயணங்களுக்கு ரயிலையே தேர்வு செய்கின்றனர்.
தீபாவளிக்காக ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தீபாவளியை முன்னிட்டு அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - திண்டுக்கல் மெமு ரயில் (எண்: 06106) அன்றைய தினம் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் அக்டோபா் 30, 31, நவம்பா் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல்- கோவை மெமு ரயில் (எண்: 06107) அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த மெமு ரயில் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications