ஆஹா "சூப்பர்".. இனி ரேஷன் கடைகளில் "இதுவும்" கிடைக்குமாம்.. தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் இனி படிப்படியாக சிறு தானியங்கள் வழங்கப்படும் என்றும், அதேபோல தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சோப்பு, டீ தூள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டு தோறும் பொங்கல் அன்று கரும்புடன் முந்திரி, திராட்சை என சிறப்பு பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் ரேஷன் கடை வாயிலாக சிறு தானியங்கள் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான அரசாணையையும் பிறப்பித்தது. இதன்படி முதற்கட்டமாக சென்னை கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகிக்கப்படும் என்றும் இதற்கான தானியங்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியாக கம்பு, கேழ்வரகு, ராகி, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநாடு
மேலும், இதற்கான விலையை நிர்ணயம் செய்வது குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. விவசாயிகளுக்கான வருவாயை உயர்த்துவதும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டுவதும்தான் இதன் நோக்கமாகும். இவ்வாறு இருக்கையில் கடந்த ஓராண்டாக பரிட்சார்த்த முறையில் நடைபெற்று வந்த இந்த சிறு தானியங்கள் விநியோகம் இனி மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ் ஆராய்ச்சி கழகம், டான் மில்லட் அமைப்பு மற்றும் கோவை நிர்மலா கல்லூரி ஆகியவை இணைந்து சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'சிறு தானிய கண்காட்சி மாநாட்டை' நேற்று தொடங்கியது.

உலக சாதனை
இதில் உலக சாதனை முயற்சியாக 555 மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த மாநாட்டை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் அவர் பேசியதாவது, "சிறுதானியங்கள் விற்பனை மற்றும் விநியோகத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கி.கி கேழ்வரகு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல வரும் ஆண்டுகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்கள் விநியோகத்தை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிறு தானியங்கள்
நோய்களை கட்டுப்படுத்த மக்கள் அதிக அளவில் சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினர் துரித மற்றும் பேக்கரி உணவுகளை தவிர்த்து அதற்கு பதிலாக இந்த சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் உடல் ஆரோக்யத்தை அதிகரிக்க செய்யும்" என்று கூறினார். இதனையடுத்து இந்த கண்காட்சி மாநாட்டில் ஆதிக அளவிலான சிறுதானிய உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இது உலக சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை அமெரிக்காவின் உலக சாதனை அமைப்பின் பதிவு மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் அமைச்சர் சக்கரபாணியிடம் வழங்கினார்..

தேங்காய் எண்ணெய்
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பரிந்துரைத்திருக்கின்றனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications