மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!
சென்னை : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர் என்றும், தற்போதைய நிலையில், 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை என்றும் உறுதி கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மின் வாரியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் ஆதார் எண்ணை இணைக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

இதுவரை 1 கோடி பேர்
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "2.66 கோடி நுகர்வோரில் இன்று 11 மணி நிலவரப்படி 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். அதில் ஆன்லைன் மூலம் 51 லட்சம் பேரும், சிறப்பு முகாம்கள் மூலம் 53 லட்சம் பேரும் இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மாத இறுதிக்குள்
சென்னையில் கூடுதலாக 4 வணிக வளாகங்களிலும் இந்த சிறப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தலைமை செயலகத்திலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

கூடுதல் கால அவகாசம்?
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதைப் பொறுத்து அவகாசம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும். முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவரது ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.

பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்
31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டாம். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக, மிக நேர்த்தியாக விரைவாக பணிகள் நடைபெறுகிறது. ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிசம்பர் 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. மற்ற விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும்." எனத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடக்கும்போதே
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், வரும் ஜனவரி 10ஆம் தேதி மின்வாரிய தொழிற்சங்கம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், பேச்சுவார்த்தை நடைபெறும்போதே போராட செல்வதா?" பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே போராட்ட களத்திற்கு செல்வது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புகள்
முன்னதாக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பட்சத்தில் மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறுவதோடு, ஏற்கனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன அல்லது பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications