மேடையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி.. இனிமே கண்டிப்பா வரணும்!
சென்னை : இளைஞரணி செயலாளராக தான் பதவியேற்று மூன்றரை வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் முதல் திமுக இளைஞரணி நிகழ்ச்சி இது என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும் என்று மேடையிலேயே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், திமுக இளைஞரணிக்கு புதிதாக சுமார் 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம், திராவிட பாசறை நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வம் காட்டக்கூடியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செய்து வரும் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசியதோடு முதல்வருக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்தார்.

இதுதான் முதல்முறை
அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "திமுக இளைஞரணி செயலாளராக எனக்கு பொறுப்பை வழங்கி சரியாக மூன்றரை வருடங்கள் ஆகின்றன. ஜூலை 4ஆம் தேதி இந்தப் பொறுப்பை வழங்கினார் தலைவர் ஸ்டாலின். இந்த மூன்றரை ஆண்டுகளில் தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் முதல் இளைஞரணி நிகழ்ச்சி இதுதான். மற்ற அணிகளின் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்கிறீர்கள். தலைவர் ஸ்டாலின், இளைஞரணி நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் கோரிக்கை விடுத்தார்.

சாதாரண விஷயமல்ல
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி, "தலைவரின் ஆணையை ஏற்று ஜூன் 5ஆம் தேதி பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். முதல் நிகழ்ச்சியை தலைவர் ஸ்டாலின் நேரலையில் பார்த்து நன்றாக நடத்தி இருந்தீர்கள் எனப் பாராட்டினார். அவரிடம் பாராட்டு பெறுவது சாதாரணமல்ல. தலைவர் அப்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ஒரு விஷயத்தை தொடங்குவது முக்கியமல்ல, தொடர்ந்து சிறப்பாக நடத்துவதுதான் மிகவும் முக்கியம் என்று சொன்னார்.

கையில் எடுத்தால் முடிக்காமல் விடமாட்டார்
திமுக இளைஞரணிக்கு புதிதாக சுமார் 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தலைவர் ஸ்டாலின், ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார். பயிற்சிப் பாசறைக் கூட்டம் குறித்து தொடர்ச்சியாக என்னிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் சுமார் 15 தொகுதிகளில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்றன. மலையளவு வேலை இருந்தாலும், அன்பகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால் போதும், அதை செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர்கள் இளைஞரணியினர்." எனத் தெரிவித்தார்.

கூப்பிடவே இல்லை
பின்னர் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். மூன்று ஆண்டுகளாக இளைஞரணி நிகழ்ச்சியில் நான் பங்கேற்வில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மூன்றரை வருடம் இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை என தெரியவில்லை. உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். சமூக ஊடகங்களிலும் உதயநிதியை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார்.

மகிழ்ச்சி
திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு வெற்றியை தேடி தந்தார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கல் பிரசாரம் மூலம் மக்கள் மனதில் பல விஷயங்களை பதிவு செய்தார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு பிரச்சினையில் இளைஞர் அணி பங்கேற்றதை எண்ணி மகிழ்கிறேன்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications