"வெரிகுட்".. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்.. சூப்பர் முடிவு!
சென்னை: வணிக நிறுவனங்கள், துணிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றும் உத்தரவு இன்று லட்சக்கணக்கான ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது என்றே சொல்லலாம்.
தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற சட்டசபையில் நேற்று சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இதுகுறித்த ஒரு சிறிய தொகுப்பை பார்ப்போம். அங்காடித் தெரு எனும் திரைப்படத்தில் பெரிய கடைகளில் பணியாற்றுவோர் தொடர்ந்து நின்றுக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு கால்களில் வெரிக்கோஸ் நோய் ஏற்படுவது பற்றி இயக்குநர் கூறியிருப்பார்.

கண்களில் கண்ணீர்
இது ஒரு புறம் இருந்தாலும், அந்த படத்தில் ஆண்களும், பெண்களும் எத்தனை நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றுகிறார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கும். அந்த படத்தை பார்த்து கண்களில் கண்ணீர் வராதோரே இருக்க மாட்டார்கள். குறிப்பாக அது போன்ற பெரிய கடைகளில் பணியாற்றும் பெண்களும் ஆண்களும்! சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய பெரிய ஊர்களில் இது போன்று பெரிய துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளன.

ஊதிய குறைப்பு
இங்கு பணியாற்றும் யாருக்கும் உட்கார அனுமதி கிடையாது. கடைகளுக்கு குழந்தை ஏதேனும் வந்தால் அதனுடன் கொஞ்சுவதற்கு கூட அச்சமடைவார்கள். சாப்பிட செல்லும் போது சூப்பர்வைசரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அவர் அந்த பணியாளர் செல்லும் நேரத்தை குறித்து கொள்வார். இதையடுத்து சாப்பிட ஒதுக்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள் அந்த பணியாளர் குறிப்பிட்ட செக்ஷனுக்கு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாத்ரூம் செல்லும் நேரம்
20 முதல் 30 வயதுக்குள்ளான பெண்களே அந்த கடைகளில் பணியாற்றுவார்கள். கடைக்குள் காலை 9 மணிக்கு (காய்கறி, மளிகை சாமான் விற்பனை என்றால் காலை 7 மணிக்கே) வந்தால் இரவு வரை சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். வாசல் தெளிப்பது, கூட்டுவது, துடைப்பது, எல்லாமே இவர்கள்தான். தலைவலி, ஜூரம், பெண்களுக்கு மாதவிடாய் என எது வந்தாலும் சாப்பிடும் நேரம், பாத்ரூம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உட்கார்ந்தால் போச்சு!

தவறு
அது போல் வாடிக்கையாளர்கள் இருக்கும் போதே ஒரு ஊழியர் தவறு செய்துவிட்டால் அவர்களை சூப்பர்வைசர் திட்டி தீர்த்துவிடுவார். இது போன்று ஏதோ கடைகளில் வைக்கப்படும் பொம்மைகளை போல அந்த ஊழியர்கள் கால் கடுக்க நிற்க வைக்கப்படுவதால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதை விட்டால் வேறு வேலை தெரியாததால் இவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என குடும்பத்தை காப்பாற்ற பணியாற்றுகிறார்கள்.

கரையேற்ற
இங்கு பணியாற்றுவோர் குடும்பத்தை காப்பாற்ற பாடுபடும் கணவன்மார்களாகவும் தங்கைகளை கரையேற்றும் அண்ணன் தம்பிகளாகவும் தம்பி, அண்ணனை படிக்க வைக்கும் அக்கா தங்கைகளாகவும் உள்ளார்கள். கஸ்டமரே வராவிட்டாலும் இவர்கள் தலைவிதி நின்று கொண்டுதான் பணியாற்ற வேண்டும். என்னதான் சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும் இப்படியாக நடத்துவது என நினைப்போர் பலர். அவர்களும் மனிதர்கள்தானே. அந்த கடைக்கு திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், தீபாவளி, பொங்கல், பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு ஜவுளி வாங்க ஒரு நாள் ஆங்காங்கே உட்கார்ந்து சுற்றினாலே அடுத்த நாள் பணிக்கு எழ முடியவில்லை. ஆனால் இவர்கள் நாள் பூரா கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு பணியாற்றுகிறார்கள். இவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை வெளிப்படையாக இந்த ஊழியர்கள் பாராட்ட முடியாவிட்டாலும் (சூப்பர்வைசரின் கோபத்துக்குள்ளாவார்கள்) மனதிற்குள் பாராட்டிதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்டாலினுக்கு பாராட்டு
ஒரு முதல்வராக ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பார்த்து செய்கிறார். அந்த வகையில் இந்த ஜவுளிக்கடை தொழிலாளர்களுக்கும் அவர் நல்லது செய்துள்ளார். என்னதான் கேரளாவில் இது முன்பே அமலாக்கப்பட்டு விட்டாலும் கூட தமிழகத்தில் இதன் தாக்கம் மிக மிக அதிகமாகவே இருக்கும். காரணம் கேரளாவை விட இங்குதான் ஜவுளிக்கடை தொழிலாளர்கள் அதிகம் என்பதால்.












Click it and Unblock the Notifications