'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க எழுச்சி பெறும்'.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையில் தனது தொகுதியான கொளத்தூர் உள்ளிட்ட பல இடங்களை முதல்வர் பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஜெயக்குமார் கிண்டல்
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- இந்த மழை காலத்தில் தி.மு.க விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எவ்வாறு செய்ய வேண்டும்? மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்த வேண்டும்? என தி.மு.க.வினர் எங்களிடம் கேட்டு மக்களுக்கு நிதி பணிகளை செய்யட்டும்.

அவதிப்பட்டு வருகின்றனர்
கோர்ட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு, கோர்ட்டு கழட்டுவது ரிப்பீட்டு என மாநாடு படத்தில் வரும் வசனம்போல முதல்வர் இதே வேலை ரிப்பீட்டாக செய்து வருகிறார். மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. சென்னையில் உள்ள 16 கால்வாய்களில் மாம்பலம் கால்வாய், ஓட்டேரி கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் சென்னை மக்கள் வெள்ள நீரில் படகுகள் மூலம் சென்று வந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க.வினர் எழுச்சி
மழைநீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படாமல் இருப்பதாலும் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் ஒரு இடங்களில் ராட்சத இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறம் இடங்களில் அ.தி.மு.க.வினர் எழுச்சியோடு விருப்பமனு அளித்து வருகின்றனர்.

தி.மு.க.வின் கைப்பாவை
இந்த எழுச்சியை பார்க்கும்போது அ.திமு.க.வும், தோழமை கட்சிகளும் வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் தி.மு.க.வின் கைப்பாவையாக செயல்படாமல் ஜனநாயக முறையில் செயல்பட்டால் நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றியை பெறும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications