10 வருடங்களாக அலைந்த காலேஜ் கிளாஸ்மேட்! பத்தே நாட்களில் முடித்துக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் தனது கல்லூரி கிளாஸ்மேட் அளித்த புகாருக்கு பத்தே நாட்களில் தீர்வு பெற்றுக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதில் சிறப்பு விஷேசம் என்னவென்றால், தன்னிடம் புகார் கூறியது தனது கல்லூரி கிளாஸ்மேட் என்பதே ஸ்டாலினுக்கு தெரியாதது தான்.
இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வருமாறு;

நன்றி நன்றி
என்னிடத்தில் மனுக்களை கொடுக்கிறபோது, மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு அதுவும் கொடுத்துவிட்டு, முடிந்துவிட்ட மாதிரி நன்றி! நன்றி! என்கிறார்கள், மனு கொடுத்தவுடன், இது முடிந்துவிடும் என்கிற நம்பிக்கை இன்றைக்கு மக்களிடத்தில் வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் ஒரு பயணத்தை நான் நடத்தினேன். நாம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பெட்டிகளெல்லாம் கோட்டைக்கு வந்தது. அதற்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டது, அதற்காக, இந்திய ஆட்சிப் பணி நிலையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார், அதற்கு என்று ஒரு இலாகா, அதற்கு என்று ஒரு அதிகாரி, ஒரு Control Room வைத்திருக்கிறோம்.

அடிக்கடி ஆய்வு
நான் அடிக்கடி அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்வது உண்டு. எவ்வளவு மனுக்கள் வந்திருக்கிறது? எவ்வளவு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது? எவ்வளவு மனுக்கள் என்ன பிரச்சனையில் இருக்கிறது? என்ன நிலையில் இருக்கிறது? ஏன் தீர்வு காணப்படவில்லை? என்ன காரணம்? என்பதைப் பற்றியெல்லாம் 15 நாட்களுக்கு ஒருமுறை அங்கே சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறேன்.

10 நாட்களில் தீர்வு
கடந்த வாரம் ஆய்வு நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். நான் ஒரு நான்கைந்து நபர்களிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது ஒரு தோழரிடம் பேசுகின்ற போது கடந்த காலங்களில் இப்பிரச்சனைக்காக பத்து ஆண்டுகளாக அலைந்தேன், ஒன்றும் நடக்கவில்லை. உங்கள் ஆட்சி வந்தபிறகு பத்தே நாட்களில் நான் நினைத்த காரியம் முடிந்துவிட்டது. மகிழ்ச்சி, மிகவும் நன்றி மிகவும் நன்றி. முதலமைச்சராக இருக்கக்கூடிய நீங்களே பேசுவீர்கள் என்று எதிர்பாக்கவில்லை என்று சொல்லி பூரிப்போடு பேசினார்.

எனது கிளாஸ்மேட்
அது குறித்து அடுத்த நாள் தொலைக்காட்சியில் அவரிடத்தில் ஒரு சிறப்புப் பேட்டி எடுக்கிறார்கள். அதை நானும் உட்கார்ந்து பார்த்தேன். அவர் அந்த சம்பவத்தைச் சொல்கிறார். இந்த தேதியில் முதலமைச்சர் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார். பத்து வருடமாக முடியாத ஒரு காரியத்தை, பத்து நாட்களில் முடிந்துவிட்டது. அதை முடிந்துவிட்டதா என்பதை முதலமைச்சரே என்னிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார். இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னொன்று சொல்கிறார், இன்னொரு விஷயம், நான் அவரிடமும் சொல்லவில்லை, சொன்னால் அவரே ஆச்சரியப்பட்டிருப்பார், நான் அவரோடு பிரசிடென்சி கல்லூரியில் ஒன்றாகப் படித்தேன், நான் அவருடைய classmate என்றார். அப்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.












Click it and Unblock the Notifications