ஜூனில் லண்டன்... ஜூலையில் அமெரிக்கா... முதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய திட்டத்தின் பின்னணி
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் மாதம் லண்டனுக்கும் ஜூலை மாதம் அமெரிக்காவிற்கும் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் துபாய் சென்ற நிலையில் அடுத்த வெளிநாடு பயணத்திற்காக மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விதமான சாதனைகளை செய்துள்ளார். சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் காவல்துறை, தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
கடந்த மார்ச் மாதம் துபாய் சென்று வந்த முதல்வர் ஸ்டாலின், அடுத்த வெளிநாட்டு பயணத்திற்காக திட்டமிட்டுள்ளார். லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வரின் லண்டன் பயணத்துக்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கு கிரீன் சிக்னலும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

துபாய் பயணம்
192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி கடந்த மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டன.
இக்கண்காட்சியில் பங்கேற்று மூதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு துபாய் சென்றிருந்தார்.

லண்டன் பயணம்
துபாய் பயணத்தை தொடர்ந்து ஸ்டாலின் வரும் ஜூன் மாதம் லண்டனுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் கடந்த மாதம் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அடுத்தகட்டமாக, 2022 ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள "க்ளோபல் ஆஃப் ஷோர் வின்ட்" (Global Off Shore Wind) நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

ஜூலையில் அமெரிக்கா
கடந்த ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றதும் ஜூன் மாத இறுதியில் ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் அங்கு செல்ல உள்ளார். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் தமிழகம் திரும்பிய பின்னர் ஜூலை மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வராக பதவியேற்ற பின் லண்டன் பயணம்
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பதவி ஏற்றபின் இரண்டாவது முறையாக அவர் வெளிநாடு செல்கிறார். அந்த வகையில்,முதல்வர் அவர்கள் ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் சென்று தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லண்டனுக்கு குடும்பத்தோடு பயணமா?
துபாய் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தோடு துபாய் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது எனவே, லண்டன் மற்றும் அமெரிக்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications