உள்ளூர் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சர்களை வளைத்துப் போடும் எம்எல்ஏக்கள்.. 2026 தேர்தலில் மாறிய காட்சி
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மேடைப் பேச்சுகளும், தெருமுனைப் பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுதவிர இந்த முறை அரசியல் கட்சிகளின் பார்வை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் யூடியூபர்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, உள்ளூர் அளவில் செல்வாக்கு செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்களை வளைத்துப் போட பெரிய கட்சிகளும், தற்போதைய எம்.எல்.ஏ-க்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்புளுயன்சர்கள் காட்டில் பணமழை பெய்து வருகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு விதமான விளம்பர யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன. கடந்த தேர்தல்களில் டிவி விளம்பரங்களுக்கும், பேஸ்புக் போஸ்ட்களுக்கும் அரசியல் கட்சிகள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் 'மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்களை' அரசியல் கட்சி தலைவர்கள் குறிவைத்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பிரபலமான உணவக விமர்சகர், நகைச்சுவை வீடியோ செய்பவர் அல்லது அந்த ஊர் செய்திகளை உடனுக்குடன் பகிரும் யூடியூப் சேனல் எனப் பலரும் அரசியல் கட்சி தலைவர்களின் விருப்ப பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அரசியல் தலைவர்களுளுடககு ஏன் இந்தத் திடீர் ஆர்வம்?
முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் செய்தித்தாள்களை விடவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும், யூடியூப் சார்ட்ஸ்களையும் தான் அதிகம் பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த ஒரு நபர் சொல்லும் கருத்து எளிதில் சென்றடைந்துவிடுகிறது. பொதுவாக நேரடியாக ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லாமல், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ செய்த பணிகளைப் புகழ்வது போலவும், அரசுத் திட்டங்களால் பயன் அடைந்தது போலவும் "கேஷுவலாக" வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
அரசியல்வாதி பேசுவதை விட, தினமும் நாம் பார்க்கும் ஒரு சமூக வலைதளப் பிரபலம் பேசும்போது அது ஒரு 'நண்பரின் பரிந்துரை' போல தெரிவது தான் இன்ஸ்டா இன்புளுயன்சர்களுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்ஸ்டா இன்புளுயனர்சகள், ட்விட்டர் இன்புளுயன்சர்களை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது, அவர்களை திட்டுவது, வார் ரூமுடன் சண்டை போடுவது போன்ற பணிகளையும் செய்கிறார்கள்.
எம்.எல்.ஏ-க்களின் தனிப்பட்ட "டிஜிட்டல் வார் ரூம்"
தற்போதுள்ள பல எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதிக்கெனத் தனியாக டிஜிட்டல் வார் ரூம்களை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மூலம் உள்ளூர் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்குப் பணம் அல்லது சலுகைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்குச் சாதகமான பிம்பத்தை உருவாக்க ஒப்பந்தங்கள் போடப்படுவதும் நடக்கிறது.
"நாங்கள் செய்யும் மக்கள் பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல இன்றைய சூழலில் இது அவசியமாகிறது. இது வெறும் விளம்பரம் அல்ல, நவீன காலத் தகவல் தொடர்பு," என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் அரசியல் பிரமுகர்.
பின்னணியில் உள்ள ஆபத்து
மறுபுறம், பணம் கொடுத்து உருவாக்கப்படும் இத்தகைய கருத்துக்கள் வாக்காளர்களைத் திசை திருப்ப வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இப்போது உள்ள சூழலில் நிஜமான வளர்ச்சிப் பணிகளை விட, எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோக்களே ஒரு வேட்பாளரின் தகுதியைத் தீர்மானிக்கும் நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பது பலரின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ, வரும் தேர்தலில் ஸ்மார்ட்போன்கள் வாக்காளர்களைதேடி செல்லும் இடமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications