மதுவிலக்கை கொண்டு வந்தால்.. கள்ளச்சாராயம் குறையாது.. அதிகரிக்கவே செய்யும்.. கமல் பேச்சு
சென்னை: கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி வெளியாகும் நிலையில் இதற்கான புரமோஷன் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல் மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கவே செய்யும் எனக் கூறியுள்ளது. அவரது கருத்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் இப்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கமல் தவிர சித்தார்த், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கொரோனா உட்பட பல்வேறு தாமதத்திற்குப் பிறகு இந்த இந்தியன் 2 படம் இப்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியன் 2: கமல் ஹீரோவாக நடித்து கடைசியாக 2022இல் விக்ரம் வெளியானது. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டு வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்திற்குப் பிறகு வெளியாக உள்ள படம் என்பதால் இந்தியன் 2 படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.
அதன்படி சென்னையில் இந்தியன் 2 தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது கள்ளச்சாராயம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கள்ளச்சாராயம் தொடர்பாகப் பல இடங்களில் பேசியுள்ளேன். நான் எனது கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் வருவதும் எனக்குத் தெரியும்.
மதுவிலக்கு: என்னைப் பொறுத்தவரை கள்ளச்சாராயம் வர முக்கிய காரணமே மதுவிலக்கு தான். மது குடிப்பது உடலுக்குக் கெடுதல் என்பதை அனைவரும் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும். இது விஷம்.. இந்த விஷத்தை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.
பொதுவெளியில் இந்த கருத்து உருவாக வேண்டும். அதுவே சரியான தீர்வு.. அதை விட்டுவிட்டு இப்போது மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கவே செய்யும். கள்ளச்சந்தைகள் உயரும்.. கள்வர்கள் பெருகுவார்கள். எனவே இந்த விஷயத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும்"என்றார்.
கள்ளக்குறிச்சி மரணம்: கமல் ஹாசனின் இந்தக் கருத்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராய குடித்து பலரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் நடந்த இந்த விஷ சாராய மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைக் கமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மது குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அளவோடு மது குடிக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று கமல் கூறியிருந்தார். அது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது.
இந்தச் சூழலில் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும் என கமல் மீண்டும் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், கமலின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications